பழங்குடி இன சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் டில்லிபாபு, தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்கள் கோரிக்கைகளை பாடல்களாக பாடினர்.

இதுகுறித்து டில்லிபாபு கூறியதாவது:

வன உரிமைச் சட்டம், தமிழகத்தில், 2006ல் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், அச்சட்டம் தற்போது வரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. பச்சை மலை, கொல்லி மலை, சேலம் கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கை மனுக்கள், முழுமையாக விசாரிக்கப்படாமல் நிராகரிக்கப்படுகின்றன. இதனால், பலரும் இச்சட்டத்தின் கீழ் பட்டா பெற முடியாமல் உள்ளனர். எனவே, அனைத்து மலைகளிலும் வாழும், பழங்குடியின மக்களுக்கு, நில உரிமைச் சான்றை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், 'பழங்குடியின சான்றிதழ்' இல்லாததால், பல லட்சம் பழங்குடியின மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். அந்தச் சான்றிதழ் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கூறுகையில், ''எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. பல இடங்களில், சமையலரே ஆசிரியராக உள்ளனர். எனவே, அரசு போதுமான ஆசிரியர்களை விரைவில் நியமனம் செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement