கேரள காங்கிரஸ் சேட்டை பதிவு; பாலிவுட் நடிகை கொந்தளிப்பு

புதுடில்லி; சமூக வலைதள கணக்கை பா.ஜ.,வுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக, அவதூறு கூறிய கேரள காங்கிரசுக்கு, பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ப்ரீத்தி ஜிந்தா. ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஒன்றின் முக்கிய பங்குதாரராகவும் அவர் உள்ளார். இவருக்கு மகாராஷ்டிராவில் செயல்படும் நியூ இண்டியா கோ ஆபரேட்டிவ் வங்கியில் கணக்கு இருக்கிறது.
அந்த வங்கி மூலம் 10 ஆண்டுக்கு முன்னதாக ப்ரீத்தி ஜிந்தா 18 கோடி ரூபாய் கடன் பெற்றார். எவ்வித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த வங்கி திவால் நிலைக்கு சென்று விட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் வங்கி நிர்வாகம் இயங்கி வருகிறது.
நிலைமை இப்படி இருக்க, ப்ரீத்தி ஜிந்தா தமது சமூக வலைதள கணக்கை பொய் செய்திகள் பரப்புவதற்காக பா.ஜ.,வுக்கு வாடகைக்கு விட்டார்; அதற்கு பிரதிபலனாக அவரது வங்கிக்கடன் 18 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது; அப்படி தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வங்கி திவால் ஆகி விட்டதாக, கேரள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
கேரளா காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த குற்றச்சாட்டு வெளியாகி இருந்தது. காங்கிரஸ் குற்றச்சாட்டு வைரலான நிலையில், ப்ரீத்தி ஜிந்தா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;
நான் மட்டுமே எனது சமூக வலைதள பக்கத்தை கையாண்டு வருகிறேன். இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவது (காங்கிரஸ்) வெட்கக்கேடானது. யாரும் எனது கடனை தள்ளுபடி செய்யவில்லை. எனது பெயரை பயன்படுத்தி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்புவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை தருகிறது.
10 ஆண்டுக்கு முன் நான் வாங்கிய கடனை முற்றிலும் திருப்பிச் செலுத்திவிட்டேன். எனது இந்த பதிவு அனைத்துக் குற்றச்சாட்டுகள், அவதூறுகளுக்கு விளக்கமளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
காங்கிரசின் அதிகாரப்பூர்வ மாநில சமூக வலைதள பக்கத்தில் இப்படி ஒரு அவதூறாக பிரசாரம் முன் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்த பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். எதற்காக இப்படி ஒரு பொய்யான செய்தி வெளியிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இதனிடையே, ப்ரீத்தி ஜிந்தாவின் பதிவுக்கு கேரள காங்கிரஸ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறி உள்ளதாவது;
உங்கள் சமூகவலை தள பக்கத்தை தாங்களே நிர்வகிப்பதாக கூறியதை அறிந்தோம். உரிய விளக்கம் அளித்ததற்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை என்றால் வங்கிக்கடன் பெற்று அதனை அடைத்த விவரங்களை உரிய ஆதாரத்துடன் பொதுவெளியில் வெளியிடுங்கள்.
இவ்வாறு கேரளா காங்கிரஸ் கூறி இருக்கிறது.










மேலும்
-
எல்லோரும் கொண்டாடுவோம்...
-
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைக்கிறது தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு
-
யாருடைய கையிலும், காலிலும்...! நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதில்
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்., முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை
-
மும்மொழி கொள்கை குறித்து முதல்வர் பதில் அளிக்காதது ஏன்? அண்ணாமலை கேள்வி