எல்லோரும் கொண்டாடுவோம்...


பந்தலூர் அருகே, உப்பட்டி பகுதி பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு, முருகன் கோவில் கமிட்டியினர் சீர்வரிசை எடுத்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கோவில் திருவிழாக்களின்போது பள்ளி வாசல் கமிட்டியின் சாார்பாக நீர் மோர் பந்தல் வைப்பது, உணவு பரிமாறுவது, தேர் ஊர்வலத்தை வரவேற்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்,இதே போல ரம்ஜான் பண்டிகையின்போது கோவில் கமிட்டியினர் பங்கேற்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.

இந்நிலையில், உப்பட்டி பகுதியில் ஜும்மா மசூதி கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் கோவில் கமிட்டியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.செந்தூர் முருகன் கோவில் கமிட்டி சார்பில் தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில்வேல் தலைமையில்., பழங்கள், இனிப்புகள், அரிசி, காய்கறி, வாழை இலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
Latest Tamil News
பள்ளிவாசலுக்கு சென்ற கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்களை, பள்ளிவாசல் தலைவர் மஜீத் ஹாஜி, செயலாளர் ஐமுட்டி, அசப்ஜான் மற்றும் நிர்வாகிகள் கட்டித்தழுவி வரவேற்றனர்.
தொடர்ந்து சீர்வரிசை பொருட்கள் பள்ளிவாசல் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு கமிட்டி சார்பில், சீர்வரிசை எடுத்து வந்த குழுவின் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, சீர்வரிசை எடுத்துச் சென்ற நிகழ்வு அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், இந்த பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒரே உறவாக வாழ்ந்து வருவதை இந்த நிகழ்வு வெளிக்காட்டி உள்ளது. மத ஒற்றுமைக்கு மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள இந்த நிகழ்வை, பார்த்து அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றனர்.
-பந்தலுார் ராஜேந்திரன்

Advertisement