எம்.பி., தொகுதிகள் குறையும்; மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு

46

சென்னை: 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.25) நடைபெற்றது. கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகம் மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே வரும் மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

தொகுதி மறு சீரமைப்பு




கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தென் இந்தியாவின் மேல் ஒரு கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் முன்னணியில் உள்ள தமிழகம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இப்போது 39 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது. இது 31 தொகுதியாக குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு 2026ம் ஆண்டு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய போகிறது. மக்கள் தொகையை கணக்கீட்டு தான் நடைபெற உள்ளது.

8 தொகுதிகளுக்கு ஆபத்து




பெண்கள் கல்வி, குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றை தமிழகம் சாதித்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைப்பதா? மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தினால், லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

31 எம்.பி.,க்கள் தான் இருப்பார்கள்



தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில், லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் 8 லோக்சபா தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவது முறையின்படி, மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது.

குரல் கொடுங்கள்




அதாவது தமிழகத்திற்கு 39 எம்.பி.,க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.,க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிந்தாலும் நமது பிரதிநிதித்துவம் குறையும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை கடந்து இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்படும். அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


முதல்வர் பதில்


இன்னுமொரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறதா? என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' நிச்சயமாக வித்திடுகிறது; அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

Advertisement