தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதல்வர் பேசுவது ஏன்: அண்ணாமலை கேள்வி

17

கோவை: '' மும்மொழிக் கொள்கையில் தோல்வி அடைந்த காரணத்தினால், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.


சந்தேகம்






நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முதல்வரிடம் யாரோ சொன்னார்களாம். அவர்கள் யார் என எனக்கு தெரியாது. 800 தொகுதிகள் தான் வரும். தமிழகத்திற்கு 22 வரணும். ஆனால், 10 தான் வரும் என முதல்வரிடம் யாரோ சொன்னார்களாம். அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.


தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் என மத்திய அரசு எங்கும் சொல்லவில்லை. இதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது மட்டும் பயன்படுத்தப்படுமா என தெரியாது. பயன்படுத்த முடியாது. தமிழகத்தை வழிநடத்த முதல்வருக்கு தகுதி உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. யாரும் பேசாத போது அனைத்து கட்சி கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்?


கபட நாடகம்





பிரதமர் மோடி, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து காங்கிரஸ் பேசுகிறது. அப்படி சீரமைத்தால் தென் மாநிலங்களில் 100 தொகுதிகள் காணாமல் போகும். அதனை நான் ஏற்கவில்லை. எதற்காக காங்கிரஸ் புரளி பரப்ப வேண்டும் என்றார்.

இது தான் அதிகாரப்பூர்வ கருத்து. இது குறித்து பா.ஜ., தலைவரோ, தே.ஜ., கூட்டணியோ, அமைச்சரோ பேசவில்லை. எதற்காக முதல்வர் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்?


தி.மு.க.,வினரின் நிலை





மூன்று மொழி கொள்கையில் தோற்றுவிட்டார்கள் என்பதை மடை மாற்ற முயற்சி நடக்கிறது. பொது மக்கள் யாரும் தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை. நான்கு பேர் மட்டும் பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்கள். சங்கரன் கோவிலில், பெயிண்ட் டப்பாவை கொண்டு போனவர்களுக்கு ஆங்கிலம் எது, ஹிந்து எது என தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலத்திற்கு பெயிண்ட் அடிக்கிறர்கள். தி.மு.க.,வினர் பள்ளி சென்று படிக்க வேண்டும். இதுதான் தி.மு.க.,வில் பெயின்ட் டப்பா தூக்கும் தொண்டர்களின் நிலை.



முதல் வேலை




இதை பார்த்த பிறகு மூன்று மொழி பிரச்னை பற்றி பேசினால், மக்கள் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அப்படியே மடை மாற்றி சம்பந்தமில்லாமல் தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசலாம் என முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
மக்களிடம் பயத்தை ஏற்படுத்தக்கூடாது. அமைதியை ஏற்படுத்துவது தான் முதல்வரின் முதல் வேலை. ஆனால், முதல்வர் பயத்தை ஏற்படுத்துவது ஏன்?


தென் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். 2001 ல் வர வேண்டிய மறுசீரமைப்பை வாஜ்பாய்தான் 2026ம் ஆண்டுக்கு ஒத்திவைத்தார். யாருக்கும் பிரச்னை வரக்கூடாது என ஒத்திவைத்த நாங்கள் மீண்டும் எப்படி பிரச்னை ஏற்படுத்துவோம்.



அழகல்ல






முதல்வர் பொய் சொல்வது தவறு. அவரது அறிக்கையில், சொன்னார்கள், தகவல் வந்தது என உள்ளது. யார் சொன்னார்கள் என கூறினால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்கும். எதுவும் இல்லாமல் டீ, காபி, பஜ்ஜி சாப்பிட செல்ல வேண்டுமா? இப்படித் தான் வந்தது என சொன்னால், எங்கள் முடிவை பரிசீலனை செய்வோம்.
மடைமாற்ற மறுசீரமைப்பு என சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இது முதல்வர் பதவிக்கு அழகல்ல.


பச்சைப் பொய்






மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்திற்கு பிரச்னை இல்லாமல் கொண்டு வருவது எங்களின் பொறுப்பு. காங்கிரசின் மாடலை ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் சொன்ன பிறகு
அதனையே பிரதமர் கொண்டு வருவதாக முதல்வர் சொல்வது பச்சைப்பொய்.

கண்டிப்பாக அதிகரிக்கும். அதிகரிக்கணும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழகத்திற்கு பிரச்னை இல்லாமல் கொண்டு வருவது எங்களின் கடமை. பிரதமரின் கடமை. மும்மொழிக் கெள்கையில் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக முதல்வர், இதனை கையில் எடுக்கிறார்.


மறுசீரமைப்புக்கு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவுகோல் வகுக்கப்படும்.
இருமொழிக் கொள்கை போருக்கு, கத்தி, கடப்பாறை, பெயின்ட் டப்பா, கருப்பு பெயின்ட் உடன் தயாராகட்டும் பொள்ளாச்சியில் கருப்பு மை அடித்தவரின் குழந்தை மூன்று மொழி படிக்கிறார்.



சாதனையாளர்கள்




எங்கள் குழந்தைகளுக்கு மூன்று மொழி. உங்கள் குழந்தைகளுக்கு இரண்டு மொழி என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. அதுதான் அவர்களின் மொழிப்போராட்டம். 8.5 கோடி மக்களுக்கும் இரண்டு மொழி என பேசவில்லை. அவர்களின் குழந்தை மட்டும் மூன்று மொழி படிப்பார்கள். இதுதான் முதல்வர் எடுக்கும் மொழிப் போராட்டமா

இரண்டு மொழிகளினால் மட்டும் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. மூன்று மொழிகள் படிப்பவர்கள் தமிழகத்தை வளர்க்கவில்லையா? மூன்று மொழி படித்த சாதனையாளர்கள் முதல்வரின் கண்ணுக்கு தெரியவில்லையா? நானும் மூன்று மொழி படித்துள்ளேன். இரு மொழி படித்ததால் தான் தமிழகம் வளர்ந்தது என முதல்வர் கூறினால், அவரின் கணக்கு ஆசிரியரை பார்க்க விரும்புகிறேன்.

மற்ற மாநிலங்களில்



மற்ற மாநிலங்களில் தமிழ் சொல்லித்தரவில்லை என கூறுகின்றனர்.

உ.பி.,யில் 9 -10ம் வகுப்புக்கு மூன்றாவது மொழியாக தமிழ் உள்ளது.

கர்நாடகாவில் 1-5ம் வகுப்புக்கு மூன்றாவது மொழியாக தமிழ் இருக்கிறது.

ம.பி,யில் 9,10,11,12ம் வகுப்புக்கு மூன்றாவது மொழியாக தமிழ் இருக்கிறது. ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு வேறு வேலையில்லயா?


தேசியக் கல்வி கொள்கை ஆவணத்தை முதல்வர், கல்வித்துறை அமைச்சர் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் உள்ளது. அவர்களின் சந்தேகம் எதுவும் கல்விக் கொள்கை ஆவணத்தில் இல்லை. இருமொழிக் கொள்கையினால் மட்டும் தமிழகம் வளர்ந்தது என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.


இரட்டைக் குழந்தைகள்





ஜாக்டோ ஜியோ மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசு ஊழியர்களை சார்ந்து உள்ளனரா என தெரியாது. இந்த அமைப்பும் தி.மு.க.,வும் இரட்டை சகோதரர்கள். அவர்களை பிரிக்க முடியாது.
தி.மு.க.,வுக்கு ஆதரவாக அந்த அமைப்பினர் பிரசாரம் செய்கின்றனர்.அரசு ஊழியர்களுடன் நாங்கள் இருக்கிறோம். ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஆதரிக்க மாட்டேன்.இந்த அமைப்பு இதற்கு முன்பு ஒரு தலைபட்சமாக தி.மு.க.,வுக்கு சார்ந்து நடந்து உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.





குழப்பம்

முன்னதாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், ​​ லோக்சபா இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது தி.மு.க., லோக்சபா தொகுதிகள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ​​ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முதல்வர் ஏன் முயற்சிக்கிறார் கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement