திருடு போன டூவீலர் திரும்ப வந்தது; மன்னிப்பு கடிதத்துடன் விட்டுச்சென்ற திருடன்!

திருப்புவனம்: திருப்புவனத்தில் டூவீலரை திருடியவர் மீண்டும் மன்னிப்பு கடிதத்துடன் அதே பகுதியில் விட்டுச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பழையூரைச் சேர்ந்தவர் வீரமணி, ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனது மனைவி அம்பிகா பெயரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் யமஹா டூவீலரை வாங்கியுள்ளார்.
டூ வீலரை வீட்டு வாசலில் இரவில் நிறுத்துவது வழக்கம். 20ம் தேதி இரவு நிறுத்தப்பட்ட டூவீலர் மறுநாள் மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
போலீசாரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்த நிலையில் திங்கள் கிழமை அதிகாலை ஒரு மணிக்கு டூவீலர் அதே பகுதியில் சிறிய சந்தினுள் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசாரும், வீரமணியும் போய் பார்த்த போது டூவீலர் முன்புறம் வெள்ளை தாளில் பிளாக் பாண்டா பயலுக என்ற பெயரில் மன்னிப்பு கடிதம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
அதில் அவசர தேவைக்காக டூவீலரை திருடி 450 கி.மீ தூரம் இயக்கியுள்ளதாகவும், டூவீலர் சேதத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் டூவீலர் திருடியதற்கு தன்னை திட்டியிருப்பீர்கள், மீண்டும் வைத்துள்ளேன், வருத்தப்படனும், இல்லை என்றால் வருந்த வைப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.
வீரமணி கூறுகையில், 'டூவீலரில் பணம் எதுவும் இல்லை, வண்டியை சேதப்படுத்தியுள்ளனர். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். திருப்புவனம் பகுதியில் தொடர்ச்சியாக டூவீலர்கள் திருடு போய் வருகின்றன. ஒருசில சம்பவங்களில் மட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். பெரும்பாலான சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. டூவீலர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.



மேலும்
-
ஆண்டுக்கு இரு முறை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்
-
கோவை வந்தார் அமித் ஷா
-
அமெரிக்காவில் அதிகரிக்கும் முட்டை கடத்தல்!
-
தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதல்வர் பேசுவது ஏன்: அண்ணாமலை கேள்வி
-
பிட்காயின் முதலீட்டு மோசடி: 60 இடங்களில் சி.பி.ஐ., சோதனை
-
மகா கும்பமேளாவில் டிஜிட்டல் குளியல்: பெண்ணின் செயல் வீடியோ வைரல்