போலீஸ் ஸ்டேஷனில் பெண் மானபங்கம்: இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

18

திண்டுக்கல்: செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திண்டுக்கல் செம்பட்டி சேடப்பட்டியில் வீடு ஒன்றில் கடந்த 2001ம் ஆண்டு நகை திருடு போனது. இது தொடர்பாக அவர்கள் செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ரெங்கசாமி, போலீசார் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர், திருடு நடந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை 2001ம் ஆண்டு பிப்.,20ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர் . அப்போது, 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மானபங்கம் செய்தனர். விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் எனக்கூறி அன்று மாலையே அனுப்பி வைத்தனர்.


இதனால் மனமுடைந்த அந்தப் பெண், தன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் காப்பாற்றினார். இது தொடர்பாக அந்த பெண், கணவருடன் இணைந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்தார்.


அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதலில் விசாரணை நடந்தது. பிறகு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா அளித்த தீர்ப்பில்,'' ரெங்கசாமி, வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து'' உத்தரவிட்டார்.

Advertisement