அமெரிக்காவில் அதிகரிக்கும் முட்டை கடத்தல்!

வாஷிங்டன்: பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, அமெரிக்காவில் கோழி முட்டை விலை உயர்ந்துள்ளது. இதனால் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து முட்டை கடத்திச்செல்லப்படுவது அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத குடியேற்றம் மட்டுமின்றி, அமெரிக்கா இப்போது முட்டை கடத்தல் தடுக்கவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவுடன் அண்டை நாடான மெக்சிகோவுக்கு நீண்ட எல்லை இருக்கிறது. அதன் வழியாக, அமெரிக்க எல்லைக்குள் பல்வகையான பொருட்கள் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுகின்றன. இவற்றில் சமீப காலமாக கோழி முட்டை கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், பறவைக்காய்ச்சல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக முட்டை கொண்டு வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது. உள்நாட்டிலும் முட்டை விலை அதிகரித்து விட்டது.
இதனால் மெக்சிகோவில் குறைந்த விலையில் முட்டை வாங்கி, அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்கின்றனர்.
இதன் காரணமாக, முந்தைய ஆண்டை காட்டிலும், இந்தாண்டு அமெரிக்க சுங்கச்சாவடிகளில் முட்டை பிடிபடுவது 29 சதவீதம் அதிகரித்துள்ளது.நுகர்வோர் மலிவான மாற்று வழிகளைத் தேடுவதால், நாட்டிற்குள் முட்டைகளை கடத்தும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு டஜன் 2 டாலர் என்ற விலையில் இருந்த உயர் தர முட்டையின் விலை, ஓராண்டு இடைவெளியில் 8 டாலர்களாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க நுகர்வோர் வருத்தப்படுகின்றனர்.



