அரசு திட்டத்தை பயன்படுத்தி வாழ்வாதாரத்தைஉயர்த்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர் பேச்சு


அரசு திட்டத்தை பயன்படுத்தி வாழ்வாதாரத்தைஉயர்த்திக்கொள்ள வேண்டும்: கலெக்டர் பேச்சு


நாமக்கல்:''அரசு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்,'' என, விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம், லாரி கட்டுமானம் நிறைந்த மாவட்டம். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தில், 5,000 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக அரசு சார்பில், தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் தொழில் மையம் மூலம் பல்வேறு புதிய தொழில் தொடங்க கடன் உதவிகளும், தொழிலாளர் நலவாரியம் மூலம், நலவாரிய அட்டைகள் பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிதொகைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆட்டோ அல்லது டாக்ஸி வாகனம் தொழில் மேற்கொள்ள அரசு மானியத்தில் நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில், குடியிருப்பு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, பார்வையிட்டார். அப்போது, மொத்த குடியிருப்பு எண்ணிக்கை, குடியிருப்பு அடுக்குகள் விபரம் குறித்தும் விசாரித்தார். மேலும், ப.வேலுார் மகளிர் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க உற்பத்தி செய்யப்படும் பள்ளி சீருடைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க தலைவர் அருள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement