பிரான்சில் 300 குழந்தைகளை சீரழித்த கொடூர டாக்டர்

16

பாரிஸ் : பிரான்சை சேர்ந்த டாக்டர் ஒருவர், கடந்த 30 ஆண்டுகளாக 300 குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.


ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த டாக்டர், ஜோயல் லீ ஸ்கோரனெக், 74. கடந்த 2017ல் இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த சிறுமி, டாக்டர் ஸ்கோரனெக் தகாத இடத்தில் தன்னை தொட்டதாக போலீசில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது மூன்று லட்சம் ஆபாச போட்டோக்கள், 650 வீடியோக்கள், குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்.


இதையடுத்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் நான்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு 2020ல் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், தற்கொலைக்கு துாண்டப்பட்டனர். மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகினர். சிலர் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை அனுபவித்ததாக கூறியுள்ளனர்.


இந்நிலையில் மேலும் பல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான வழக்குகள் நடந்து வருகின்றன. அதில் ஆஜராவதற்காக அழைத்து வரப்பட்ட அவர், கடந்த 30 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டார்.


நீதிமன்றத்தில் நேற்று அவர் கூறுகையில், “நான் குழந்தைகளுக்கு எதிராக அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துள்ளேன். அந்த பாதிப்புகள் சரிசெய்ய முடியாதவை என்பதை அறிவேன். என் செயல்களுக்குப் பொறுப்பேற்கிறேன்,” என்றார்.

Advertisement