சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 10ல் துவக்கம்: 12ம் தேதி முதல்வர் பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச் 10ம் தேதி கவர்னர்உரையுடன் துவங்குகிறது. 12ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:
புதுச்சேரி 15வது சட்டசபையின், 5வது கூட்டத் தொடர் கடந்தாண்டு மார்ச் மாதம் கவர்னர் உரையுடன் துவங்கி, 11 நாட்கள் நடந்தது. பின்பு, ஆக., 14ம் தேதி காலவரையறையின்றி சபை ஒத்தி வைக்கப்பட்டது. 5வது கூட்ட தொடரின் 2வது பிரிவு பிப்., 12ம் தேதி மீண்டும் கூடியது. அதில், கூடுதல் செலவினங்களுக்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. பின், அன்றைய தினமே காலவரையறை இன்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, 15வது சட்டசபையின் 6வது கூட்ட தொடர், வரும் மார்ச் 10ம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது. கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றி துவக்கி வைக்கிறார். மறுநாள் 11ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், 12ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2025-26ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார். அதன்பின்பு அலுவல் ஆய்வுக் குழு கூடி, சட்டசபை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பதை ஆலோசித்து அறிவிக்கப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, 2வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 90 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. மீதி தொகை, மார்ச் 31ம் தேதிக்குள் செலவிடப்படும்.
தற்போது, காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுதும், காகிதம் இல்லாத டிஜிட்டல் நடைமுறையில் மேற்கொள்ளப்படும்.
பட்ஜெட் கூட்ட தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் விவாதிக்க அதிக நேரம் கேட்டால், நாள் முழுதும் சபையை நடத்த தயாராக உள்ளோம். கடந்தாண்டை விட கூடுதல் நாட்கள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். அதிகாரிகள் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதால், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. தற்போது துறை தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்கள், நல்ல முறையில் பணி செய்ய வேண்டும். சபையில், ஒருமையில் பேசுவது, தரம் தாழ்ந்து பேசுவது போன்றவை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்தால், கடும் நடவடிக்கை குறித்து சட்டசபையில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!