சீர்காழி இரட்டை கொலை வழக்கு கடலுாரை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள்
மயிலாடுதுறை:சீர்காழி இரட்டை கொலை வழக்கில், கடலுாரை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பளித்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானியத் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராபியாபீவி, மகள் சமீரா பானு.19, மாமியார் கதிஜாபீவி.60; ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, ராபியா பீவி வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த சமீரா பானு, அவரது பாட்டி கதிஜா பீவி இருவரும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 2015ம் ஆண்டு, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியதில், கடலுார் மாவட்டம் பாதிரிகுப்பம் தினேஷ்குமார், 32; புதுப்பாளையம் சுரேஷ்குமார், 27; காராமணிகுப்பம் கமல், 30; செல்லங்குப்பம் ஆனந்த், 27; ஆகிய 4 பேர் சேர்ந்து மாமியார், மருமகள் இருவரையும் கொலை செய்தது தெரிவந்து, 2018ம் ஆண்டு கைது செய்தனர்.
கொலை நடந்த அன்று, சமீரா பானு மற்றும் அவரது பாட்டி கதிஜா பீவி மட்டும் இருந்ததை அறிந்த, தினேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றனர். அப்போது, இருவரையும் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், கைது செய்யப்பட்ட தினேஷ்குமார், சுரேஷ்குமார், கமல், ஆனந்த் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.
இவ்வாழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.