உக்ரைன் விவகாரத்தில் கொள்கையை மாற்றிய அமெரிக்கா

நியூயார்க் உக்ரைனின் இறையாண்மை, நில உரிமை தொடர்பாக ஐ.நா., சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், தன் நிலைப்பாட்டை மாற்றி, ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஓட்டளித்தது. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
தீர்மானம்
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைத் தாண்டியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு இருந்து வந்தது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அதன் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் உள்ளார். மேலும், போர் நிறுத்தப் பேச்சுகளில் உக்ரைனுக்கு அவர் அழைப்பும் விடுக்கவில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியின்போது, உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ மற்றும் நிதி உதவிகளையும் அவர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா., பொது சபையில், உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு ஐரோப்பிய நாடுகள் இணைந்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளன. உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் நில உரிமையில் ஆதரவாக இருப்போம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.
ஐ.நா., பொது சபையில் இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், ரஷ்யாவுக்கு ஆதரவாக, தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா ஓட்டளித்தது.
புறக்கணிப்பு
ஆனால், 93 ஓட்டுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவறியது. 18 நாடுகள் எதிர்த்து ஓட்டளித்தன. இந்தியா உட்பட, 65 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இதற்கிடையே, போரை உக்ரைன் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்கா சார்பில் போட்டி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உக்ரைனின் இறையாண்மை உள்ளிட்டவை தொடர்பாக அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் பல திருத்தங்களை கொண்டு வந்தன.
அதனால் ஓட்டெடுப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 93 பேர் ஓட்டளித்தனர். அதே நேரத்தில், எட்டு நாடுகள் எதிர்த்து ஓட்டளித்த நிலையில், 73 நாடுகள் புறக்கணித்தன.
இதற்கிடையே, இதுபோன்ற தீர்மானத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. மொத்தம், 15 உறுப்பினர்கள் உள்ள பாதுகாப்பு கவுன்சிலில், ஒன்பது ஓட்டுகள் பெற்றால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும்.
அதே நேரத்தில், நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை, தங்களுக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினால், தீர்மானம் தோல்வியடையும்.
அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது பிரான்ஸ் பல திருத்தங்களை கூறியுள்ளது. அதனால், இந்தத் தீர்மானம் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
லித்தியம், கிராபைட் உட்பட பல அரிய வகை கனிமங்கள், உக்ரைனில் அதிகளவில் உள்ளன. மின்னணு சாதனங்கள், சிப் உள்ளிட்டவை தயாரிக்க இதுபோன்ற கனிமங்கள் தேவை.இதற்காக, சீனாவை சார்ந்திருப்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பவில்லை. இதற்கிடையே, உலகின் அரிய வகை கனிமங்களில், 5 சதவீதம் உக்ரைனில் உள்ளது.கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்தபோதே, டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது, டிரம்ப் அதிபரானால், அரிய வகை கனிமங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகக் கூறினார்.சமீபத்தில் இது தொடர்பாக இரு தரப்பு பேச்சு நடந்தது. அப்போது, அரிய வகை கனிமங்கள் வர்த்தகத்தில், 50 சதவீத லாபத்தை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் முதல் நிபந்தனை விதித்தார். ஆனால், ஜெலன்ஸ்கி மறுத்தார்.இருப்பினும் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.இதற்கிடையே, அரிய வகை கனிமங்களை தங்கள் நாட்டிலிருந்தும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் இருந்தும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபரிடம் கூறியுள்ளார்.இதையடுத்து, உக்ரைனை புறந்தள்ளி, ரஷ்யாவுடன் டிரம்ப் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
