ராஜ்யசபாவுக்கு கெஜ்ரிவால் போட்டியா: ஆம் ஆத்மி மறுப்பு

4


புதுடில்லி: டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று வெளியான தகவலை மறுத்துள்ள ஆம் ஆத்மி, அவரை ஒரு தொகுதிக்குள் அடைக்க முடியாது எனக்கூறியுள்ளது.


டில்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் ராஜ்யசபாவுக்கு செல்லப்போவதாக தகவல் வெளியாகி வந்தது.


இந்நிலையில், பஞ்சாபில் லூதியானா மேற்கு சட்டசபைத் தொகுதி காலியாக உள்ளது. இத்தேர்தலில், அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் அரோரா போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது. இவர் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டி உள்ளது. இதனையடுத்து, கெஜ்ரிவால் மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்லலாம் என மீண்டும் தகவல் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறியதாவது: கெஜ்ரிவால் ராஜ்யசபாவிற்கு செல்லவில்லை. முன்பு மீடியாக்கள், கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் ஆவார் என்றன. தற்போது ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட போவதாக கூறுகின்றன. இரண்டுமே தவறு. கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவருக்கான தேவை அதிகம் உள்ளது. அவரை ஒரு தொகுதிக்குள் அடைத்து விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement