அனைவருக்கும் பென்சன் கிடைக்க புது திட்டம்: மத்திய அரசு பரிசீலனை!

6


புதுடில்லி: நாட்டில் உள்ள அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அரசு மற்றும் சில தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இதனைத் தவிர்த்து, அடல் பென்சன் யோஜனா( மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலுத்தினால் 60 வயதுக்கு பின்பு பென்சன் கிடைக்கும்) திட்டம், பிரதமர் ஷராம் யோகி மன்தன் யோஜனா என்ற பென்சன் திட்டம் மட்டும் உள்ளது.

இருப்பினும், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானம், வீட்டு வேலை, உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்கள் அனைவரும் இந்த திட்டங்களினால் பலன் கிடைப்பது இல்லை. இதனையடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்சன் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக ' யுனிவர்சல் பென்சன் திட்டம்' ஒன்றை உருவாக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதில், தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய பென்சன் திட்டம், விருப்ப பென்சன் திட்டம் உள்ளிட்ட அனைத்து பென்சன் திட்டங்களையும் ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொது மக்கள் விரும்பினால், இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும், அரசின் பங்களிப்பு எதுவும் இதில் இருக்காது எனவும் டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement