தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு 6 ஆண்டு தடை போதுமானது: மத்திய அரசு பதில்

15


புதுடில்லி: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் தடை யே போதுமானது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கவேண்டும். நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவிற்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ் நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்பது கடுமையானது. ஆறு ஆண்டுகள் தடையே போதுமானது. வாழ் நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற கேள்வி பார்லிமென்டின் அதிகார வரம்பில் வருகிறது.

விகிதாசாரம் மற்றும் நியாயத்தன்மையின் கொள்கைகளை கருத்தில் கொண்டு தகுதி நீக்கத்திற்கான காலத்தை பார்லிமென்ட் முடிவு செய்கிறது.தடையை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம், தடை உறுதி செய்யப்படுவதுடன், தேவையற்ற கடுமை தவிர்க்கப்படும். சட்டங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று மட்டுமே சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ய முடியும்.


ஆனால் , மனுதாரரின் கோரிக்கைப்படி வாழ்நாள் தடை விதிக்க முடியாது. தகுதி நீக்க காலத்தை முடிவு செய்ய பார்லிமென்டிற்கு தான் அரசியலமைப்பு அதிகாரம் அளித்து உள்ளது. தகுதி நீக்கத்திற்கான காரணத்தையும், அதற்கான கால அளவையும் தீர்மானிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கே உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement