விண்ணதிர முழங்கிய 'ஓம் நமசிவாய'; ஈஷாவில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில், 'ஈசனுடன் ஓர் இரவு' மஹா சிவராத்திரி நிகழ்ச்சியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'மகா யோகா யக்னா' தீபமேற்றி துவக்கி வைத்தார்.

கோவை, ஈஷா யோகா மையத்தில் 31வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று( பிப்.,26) நடந்தது. தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவரை வரவேற்றார். தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் அமித்ஷா வழிபாடு செய்தார். சூரிய குண்ட புனித நீரைத் தெளித்து வழிபட்டார். அங்குள்ள நாக சன்னதியில், தீபம் காட்டி வழிபாடு நடத்தினார். அமித் ஷாவுக்கு, சத்குரு 'அச்சத்துக்கு அப்பால்' எனப் பொருள்படும் 'அபயசூத்ரா' வை கையில் கட்டிவிட்டார். தொடர்ந்து, அங்கிருந்து நடந்து சென்று, நந்தி சிலைக்கு தாமரை மலர் சமர்ப்பித்து, வழிபாடு செய்தார்.


Tamil News
Tamil News
பின்னர் லிங்க பைரவி சன்னதிக்குச் சென்ற அமித் ஷாவுக்கு, அங்கிருந்த மும்மூர்த்திகளின் ஓவியம் குறித்து, சத்குரு விளக்கினார். பின் அங்கிருந்த ஆலமரத்துக்கு, அமித் ஷா, புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தார். தொடர்ந்து, திரிசூலத்துக்கு நெய் தீபம் ஏற்றினார். லிங்க பைரவிக்கு தேங்காய், மஞ்சள், நைவேத்தியம் படைத்து வழிபட்டார். லிங்க பைரவி முன் வைத்து அர்ச்சித்த லிங்க பைரவி தேவின் உருவம் பதக்கத்துடன் கூட தங்கச் சங்கிலியை, சத்குரு, அமித் ஷாவுக்கு அணிவித்தார். தொடர்ந்து, திரி சூலத்துக்கு மாங்கல்ய பால சூத்திரத்தை அமித் ஷா கட்டினார். பின்னர், சந்திர குண்டலத்தை அமித் ஷா பார்வையிட்டார்.

மஹா சிவராத்திரியின் முக்கிய அங்கமாக, தியானலிங்கத்தில் சத்குரு நிகழ்த்திய பஞ்சபூத க்ரியாவில், அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, அமித் ஷா உட்பட வழிபாட்டில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு, தியானம் ஆனந்தம் என்ற வாசகம் அடங்கிய, கருப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. பின்னர், சத்குரு இயக்கிய வாகனத்தில், அமித் ஷா மேடைக்கு வந்தார். அங்கு, ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்தை வழிபட்டார்.
தொடர்ந்து, 'மஹா யோகா யக்னா' தீபத்தை ஏற்றி, மஹா சிவராத்திரி விழாவை அமித் ஷா துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சியில், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள், பாடகர்கள் சந்தீப் நாரயண், சத்யபிரகாஷ், சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய், அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் முக்திதான் காத்வி, இந்திய ஆன்மிக பாடல்களைப் பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள ஜெர்மனியின் காஸன்ட்ரா மே உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் இசை, பார்வையாளர்களை, பரவசத்தில் ஆழ்த்தியது. இடையிடையே சத்குரு நடனமாடிய போது, பார்வையாளர்களின் ஆரவாரம் உச்சத்துக்கு சென்றது.


ஒடிசா கவர்னர் ஹரிபாபு கம்பஹம்பதி , பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன், மகா., மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோர், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement