ஏகாம்பரநாதர் கோவில் நடைபாதை குப்பை கொட்டும் இடமான அவலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மின்விளக்கு, நவீன கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த, மத்திய அரசு 2014ல், 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்த நிதியில் இருந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டது. கட்டுமான பணி முறையாக நடைபெறாததால், நடைபாதை ஓரம் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் கற்கள், சில ஆண்டுகளிலேயே சரிந்து விழுந்தன.

கிழக்கு மாடவீதியில், தடுப்புச்சுவர் கற்களை இணைப்பதற்காக அமைக்கப்பட்ட துருப்பிடிக்காத இரும்பு உருளை கம்பிகளும் மாயமாகின. மேலும், குப்பை கொட்டும் இடமாமாகவும், மாடுகள் கட்டி பராமரிக்கும் மாட்டுத்தொழுவமாகவும் நடைபாதை மாறியுள்ளது.

இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே, ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள நடைபாதையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement