சாலையோரம் மண் குவியல் ரயில்வே சாலையில் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மழைநீர் வெளியேறும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால்வாயில் விடுபட்ட இடங்களில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம் கட்டுமான பணி நடந்தது.

இதில், புற்றுநோய் மருத்துவமனை அருகே, சாலையோரம் மின்மாற்றி இருந்ததால், கால்வாய் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, விடுபட்ட இடத்தில் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து, விடுபட்ட இடத்தில் கட்டுமான பணி கடந்த வாரம் முடிக்கப்பட்டது. இருப்பினும், கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, சாலையோரம் போடப்பட்ட மண் குவியல் அகற்றப்படாமல் உள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் உள்ள மண் குவியலால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ரயில்வே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'

Advertisement