முதல்வர் நிதீஷ் இதை செய்தால், அரசியலைக் கைவிடுகிறேன்: பிரசாந்த் கிஷோர் சவால்

பாட்னா: 'அமைச்சர்களின் பெயர்களை காகிதத்தைப் பார்க்காமல், முதல்வர் நிதீஷ் குமார் படித்தால் நான் அரசியலைக் கைவிட்டு அவருக்காக வேலை செய்யத் தொடங்குவேன்' என ஜன் சுராஜ் கட்சி தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி பெரும் வெற்றி பெறும். ஏப்ரல் 11ம் தேதி ஒரு பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். பேரணியை நடத்த அனுமதி கேட்டு பாட்னா மாவட்ட நிர்வாகத்திற்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.
உடல் ரீதியாக சோர்வடைந்து மன ரீதியாக ஓய்வு பெற்ற முதல்வரை (நிதீஷ் குமார்) அகற்றுவோம். சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லக்கூடாது. கூட்டணிகளை மாற்றிக் கொண்டே நிதிஷ் குமார் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இதன் மூலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றாலும் அவர் முதல்வராக இருக்க முடிகிறது.
அம்பு (ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் சின்னம்) தாமரையுடன் (பா.ஜ.,) மிதக்கவோ அல்லது விளக்குடன் (ராஷ்டிரா ஜனதா தளம்) பிரகாசமாக எரியவோ கூடாது என்பதை உறுதி செய்யவும், நிதீஷ் குமார் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாத வகையில் ஓட்டளிக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பதும், சில பிரிந்த சாதிகளை சமாதானப்படுத்துவதற்கு தான் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதை செய்யட்டும்...!
நிஷாந்த் (நிதீஷ் குமார் மகன்) பொது வாழ்வில் இல்லாததால் அவரைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால், மாநில அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பெயர்களை ஒரு துண்டு காகிதத்தைப் பார்க்காமல் படிக்குமாறு அவரது தந்தையிடம் நான் சவால் விடுகிறேன். இவ்வாறு நிதிஷ் குமார் தனது மன உறுதியைக் காட்டினால், நான் அரசியலைக் கைவிட்டு அவருக்காக வேலை செய்யத் தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.









மேலும்
-
உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 ஊழியர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கமிஷன் தலைவர் சந்திப்பு
-
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!
-
அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது; 18 பேர் பத்திரமாக மீட்பு
-
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
மனதிற்கு நிறைவை தந்த மகா கும்பமேளா