ராணுவ விஞ்ஞானி டில்லி பாபுவுடன் ஒரு நேர்காணல்

2

ராணுவ விஞ்ஞானி டில்லி பாபுவை பற்றி..சில வரிகளில்


*டாக்டர்.அப்துல் கலாம் பணியாற்றிய டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக உள்ளார்.

* போர் விமான எஞ்சின் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் ஈடுபட்டு உள்ளார்.

* இவர் விமான எஞ்சின் தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்று உள்ளார்.

* இலக்கியம், தொழில் நுட்பம் சார்ந்து நூல்களை எழுதி உள்ளார்.

* மாணவர்களை தன் அறிவார்ந்த பேச்சுக்களின் மூலம் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார்.

தினமலர் நாளிதழ் சிறப்பு பேட்டி






விஞ்ஞானி டில்லிபாபு தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி அளித்தார். பேட்டி முழு விவரம் இதோ.,

தேசிய அறிவியல் தினம்




தேசிய அறிவியல் தினம் என்பது மாணவர்ளகள் இடையே அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில், கடந்த 1987 லிருந்து ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வளர்ந்த இந்தியாவை கருத்தில் கொண்டு உலக அளவிலான தொழில்நுட்பம் சார்ந்த தலைமைத்துவத்தை நோக்கி இளைஞர்களளை கொண்டு வழிநடத்துவது எனும் கருப்பொருளில் நடக்கிறது.

இந்த அறிவியல் தினம் கொண்டாட்டத்திற்கான காரண கர்த்தாவாக, உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி, தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமனே ஆவார். இவர் புகழ் பெற்ற ராமன் விளைவை கண்டுபிடித்து, உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்தார். இதற்காக 1930 ல் நோபல் பரிசும் பெற்றார். இதன் காரணமாகவே பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

ராணுவ விஞ்ஞானிகள் செய்யும் பணி என்ன?



நாட்டின் பாதுகாப்புக்கு முதுகெலும்பாய் இருப்பது முப்படைகள். இந்த முப்படைகளுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கருவிகள், ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பதே இராணுவ விஞ்ஞானிகளின் பணி. மேலும், சி.ஆர்.பி.எப்., உட்பட துணை ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், உபகரணங்கள், ஆளில்லா டிரோன்களை உருவாக்குவதில் இராணுவ விஞ்ஞானிகளின் பங்களிப்பு அதிகம்.

ராணுவ விஞ்ஞானிகளில் புகழ் பெற்ற டாக்டர்.அப்துல் கலாமின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படி?



சிறப்பான கேள்வி... நான் ராணுவ விஞ்ஞானி ஆகியதற்கு முக்கிய காரணம் டாக்டர்.அப்துல் கலாம். ராணுவ விஞ்ஞானி என்ற பதவி உள்ளது என்பதே, அவரால் தான் தெரிந்து கொண்டேன். பொறியியல் பட்டம் பெற்ற பின், முதன் முதலாக அக்னி சிறகுகள் புத்தகத்தை நூலகத்தில் படித்தேன். பொதுவாக புத்தகங்களை நாம் புரட்டுவோம். ஆனால், அப்புத்தகம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. அதை படித்த போது, அவரை போலவே ஆக வேண்டும் என கனவு கண்டேன். அந்த கனவே நினைவாக்கினேன்.

மாணவர்கள் ராணுவ விஞ்ஞானி ஆக செய்ய வேண்டியது?



எஸ்.இ.டி., என்ற விஞ்ஞானி நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடக்கிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடக்கும். இதிலும் தேர்ச்சி பெற்றால் நீங்களும் ராணுவ விஞ்ஞானியே. இந்த தேர்வை எழுதுவதற்கு பொறியியல், மருத்துவம், அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருப்பது அவசியம். எஸ்.இ.டி., தேர்வு எழுதுவதற்கும் சில தகுதி தேர்வுகள் நடக்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எஸ்.இ.டி., தேர்வை எழுத முடியும்.

புனேவில் உள்ள ராணுவ கல்லூரியை பற்றி கொஞ்சம் சொல்லுங்க?



டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் புனேவில் பாதுகாப்பு உயர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவி உள்ளது. இங்கு ராணுவ விஞ்ஞானிகளுக்கு சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இதில், வகுப்பறை பயிற்சியை தாண்டி, போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், ராணுவ டேங்கர்கள் போன்றவற்றில் பார்க்கலாம், பயணமும் செய்யலாம். பின்னர், நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சிகளை தொடரலாம். இத்துறையில் பிரகாசமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.

விஞ்ஞான உலகில் பெண்களின் பங்களிப்பு எப்படி?



ஏவுகணை ஆராய்ச்சி, நீர்மூழ்கி கப்பல் சோதனை, பீரங்கி டாங்கு சோதனை என பல துறைகளில் பெண் விஞ்ஞானிகள் உள்ளனர். டி.ஆர்.டி.ஓ., ஐ சேர்ந்த பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் உலகம் முழுவதும் அறியப்படும் நபராக உள்ளார். அக்னி ஏவுகணை திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றினார் என்பதை யாரும் மறக்க முடியாது. கணிசமான எண்ணிக்கையில் பெண் விஞ்ஞானிகள் உள்ளனர். பாதுகாப்பு துறையின் எத்துறைகளிலும் பெண்கள் பணிபுரியலாம்.

இந்திய ராணுவ விஞ்ஞானியாக பணிபுரியும் ஆசை உள்ள பள்ளி மாணவர்கள் செய்ய வேண்டியது?



மாணவர்கள் அறிவியல் சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளவும். அப்போது, அவர்களின் சிந்தனைத்திறன் வெளிப்படும். மதிப்பெண் அடிப்பைடையில் மட்டுமே ஒரு மாணவனை மதிப்பிட முடியாது; கூடாது. ஆசிரியர், பெற்றோர் பிள்ளைகளை ஊக்கப்படுத்தவும். மாணவர்கள் வகுப்பறையை தாண்டி வாசிப்பதும், பாடபுத்தகங்களை தாண்டி யோசிக்க வேண்டும். இதுவே, விஞ்ஞானியாக மாறுதற்கான முதல் படி.

அப்துல் கலாமின் அறியப்படாத குணம், சாதனை?



அப்துல் கலாம் ஐயாவின் சிந்தனைகளை பார்த்து மிரண்டு உள்ளேன். அவர் அடிக்கடி எங்களிடம் சொல்வது 'உபயோகப்படாதவர்கள் என யாரும் இல்லை. நாம் தான் அவர்களை உபயோகப்படுத்த வேண்டும்' என்பார். எனது மூளை உனது வலியை குறைக்கட்டும் என்பார்.

* சாதனை நாயகன்




சுதந்திர இந்தியாவில் முக்கிய திட்டங்களில் ஒன்றான, ஐம்பது ஏவுகணைகளை ஒரு சேர தயாரிக்கும் திட்டத்தின் முகமாக அறியப்பட்டார். பாதுகாப்பு துறையில் நடந்த ஆராய்ச்சிகளின் மூலம் பொது மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களை கொண்டு வந்தவர்.

கொசு மருந்து எல்லாமா தயார் செய்கிறீர்கள்?



டி.ஆர்.டி.ஓ.,வில் உயிரை பறிக்கும் ஆயுதங்கள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை; உயிரை காக்கும் படைப்புகளும் தயாரிகப்படுகின்றன. ராணுவ வீரர்கள் தங்களை கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பதற்கு "DEPA" எனும் மருந்து உள்ளது. இதை ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொது மக்களும் வாங்கி பயன்படுத்த முடியும். " tissue paper" வடிவிலும் கூட கொசு விரட்டியை கண்டு பிடித்து உள்ளோமே.

கொசு மாத்திரையா! கேட்பதற்கே வித்தியாசமாக உள்ளதே?



ராணுவ வீரர்கள் மலைப்பகுதியில் இருக்கும் போது, அங்கு இருக்கும் நீர் நிலைகளில் உள்ள கொசுக்களை அழிப்பதற்கு, இந்த மாத்திரைய தண்ணீரில் தூக்கி போட்டால் போதும். இந்த மாத்திரை ஒரு வாரத்திற்கு மேல், தண்ணீரில் மிதந்து கொண்டே இருக்கும். அப்போது, அங்கு உள்ள கொசு முட்டைகளை அழித்துவிடும்.

மிளகாயில் ஆயுதமா..அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க?



உலகில் உள்ள காரமான மிளகாய்களில் ஒன்றான புத் ஜோலக்கியா இந்தியாவில் உள்ளது. இந்த மிளகாயை பயன்படுத்தி ' டி.ஆர்.டி.ஓ., காப்சிஸ் ஸ்பிரே' என்ற ஆயுதத்தை உருவாக்கி உள்ளோம். இதை எதிராளி மீது பயன்படுத்தினால் பயங்கரமா கண் எரிச்சல், தோல் எரிச்சல் ஏற்படும். இதை தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டிருக்கும் போது, கதவில் உள்ள சிறய துவாரம் வழியாக பயன்படுத்தி, கனப்பொழுதில் அவர்களை செயலிழக்க செய்ய முடியும்.

இந்தியாவில் மொத்தம் எத்தனை டி.ஆர்.டி.ஓ., ஆய்வுக் கூடங்கள் உள்ளன?



இந்தியா முழுவதும் ஏறக்குறைய 50 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு துறை சார்ந்து இயங்கும். பெங்களூரில் விமானத்துறை சார்ந்த ஆய்வுக்கூடம் உள்ளது. விமானத்தின் தலைநகரமாகவே பெங்களூரு விளங்குகிறது.

ஸ்டார்ட் அப்கள் துவங்குவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சியில் வாய்ப்புகள் எப்படி உள்ளது?

ஸ்டார்ட் அப்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இது குறித்த முழு விபரமும் டி.ஆர்.டி.ஓ., வலைதளத்தில் உள்ளது. இளைஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிடலாம். இதன் மூலம் அவர்களுக்கான யோசனைகள், நிதி உதவிகள் வழங்கப்படும்.

பாதுகாப்பு துறையின் ஐ டெக்ஸ் திட்டம் என்பது என்ன?



இத்திட்டத்தின் குறிக்கோள் பாதுகாப்பு துறையில் மேம்பாடு அடைவது குறித்ததே. இத்திடத்தில் தொழில் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு தொடர்பான புதுமையான ஆராய்ச்சிகளுக்கான சவால். இதில் இளைஞர்கள் பங்கேற்கலாம். 10 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கப்படுகிறது.

டி.ஆர்.டி.ஓ., நடத்தும் போட்டியா?



'துணிந்து கனவு காண்' எனும் தலைப்பில் ஆண்டு தோறும் போட்டி நடத்தப்படுகிறது. இது டாக்டர்.அப்துல் கலாமின் நினைவாக நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை. 18 வயது ஆகி இருந்தால் மட்டும் போதும். இதற்கு மொழி தடையில்லை. "dare to dream" என்ற இணையப்பக்கத்திற்கு சென்று போட்டியில் பங்கு பெறலாம்.
இதில் தேர்வாகியவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசு கிடைக்கும். மேலும், விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணிபுரிவதற்கான வாய்யுப்பும் வழங்கப்படும்.

டி.ஆர்.டி.ஓ.,வில் நீங்கள் செய்யும் பணி பற்றி?



ஒரு நாடு வல்லரசு என உலக அளவில் ஏற்றுக்கொள்ள படுவதற்கு பல தகுதிகள் உள்ளன. அதில் ஒன்று, போர் விமான எஞ்சினை தயாரிக்கும் வல்லமை படைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சவாலான போர் விமான எஞ்சின் ஆராய்ச்சியில் உள்ளேன். நவீன போர் விமான எஞ்சின் ஆராய்ச்சியில் பணியாற்றி வருவதாக..பணிவுடன் கூறுகிறார்.

உயர்கல்வி மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறுவதற்கு டி.ஆர்.டி.ஓ., எறன்ன செய்ய வேண்டியவை?



ஜெ.இ.இ., தேர்வின் மூலம் ஏரோ நாட்டிக்கல் என்ஜினியரிங், ராக்கெட் இன்ஜியரிங் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. புனேவில் டி.ஆர்.டி.ஓ., ஒரு பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறது. இங்கு எம்.டெக்., பி.ஹெச்.டி., போன்ற ராணுவம் சார்ந்த பட்ட மேற் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள்?

வளர்ந்த இந்தியாவை கருத்தில் கொண்டு உலக அளவிலான தொழில்நுட்பம் சார்ந்த தலைமைத்துவத்தை நோக்கி இளைஞர்களளை கொண்டு செல்வதே இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது.


விஞ்ஞானத்தில் இந்தியாவின் வளர்ச்சி? இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உலகத்தில் உள்ள நவீன போர் விமானத்தை தயாரிக்ககூடிய ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அணு சக்தியில் இயங்க கூடிய நீர்மூழ்கி கப்பல் உடைய ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாலஸ்டிக் மிசைல் டிபன்ஸ் எனப்படும் ஏவுகணை தொழில்நுட்பம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகத்தின் மிக வேகமாக பறக்கும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை இந்தியா வசம் உள்ளது.


ராணுவ தடவாளங்கள் ஏற்றுமதியில் எப்போது இந்தியா முன்னிலைக்கு வரும்?

ஒரு போர் விமானத்தை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகும். விமானம் பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இந்த சோதனைகளில் சாதனை படைக்கும் விமானம் மட்டுமே போர் களத்திற்குள் நுழைய முடியும். இதற்காக தான் இத்தனை ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவின் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான முக்கியத்துவம்?

போரில் ஐந்தாம் தலைமுறையின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஐந்தாம் தலைமுறை விமானங்கள் மற்ற போர் விமானங்களை விட மேம்பட்டதாக இருக்கும். இதன் காரணமாகவே, உலகளாவியான பேச்சுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை பற்றி அடிபடுகிறது. நம்முடைய ஆராய்ச்சியாளர்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் குறித்த ஆராய்ச்சியை நடத்தி வருகின்றன.

பெங்களூரில் உங்களுக்கு பிடித்த இடம்?



சி.வி., ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., குடியிருப்பு பகுதி என்னுடைய சொர்க்கம். அங்குள்ள மரங்கள், விசாலமான சாலைகள் என்னை ஒவ்வொரு முறையும் வரவேற்கின்றன.
இந்த இயற்கையான சூழலில் இருந்து கொண்டு தான், பல விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கான தீர்வுகளை கண்டு பிடித்து உள்ளேன்.

இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?



இந்த தலைமுறையினரை " touch screen generation" என்றே அழைப்பேன். முன்னேறிய தொழில்நுட்பம் அவர்கள் கையில் ஊஞ்சலாடுகிறது. நேரத்தை வீணாக்காதீர்கள்; எதிர்கால கனவை நோக்கி பயணியுங்கள்.



தினமலருக்கு நன்றி சொல்லியே தீருவேன் !

நாளிதழில் புதுமைகளை புகுத்துவதில் தினமலர் கில்லாடி. தலைப்பு, படங்கள் என அனைத்தும் புதுமையாகவே உள்ளது. தினமலர் ஆசிரியர் குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தினமலர் வாசகர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சார் பாயாசம் சூப்பர்..சர்க்கரை குறைவு...முந்திரி, திராட்சை ஏதும் இல்லை.



- நமதுசிறப்பு நிருபர்

Advertisement