ஜூனியர் பெண்கள் ஹாக்கி சென்னை அணி 'சாம்பியன்'

சென்னை, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மாநில அளவில் ஜூனியர் பெண்களுக்கான ஹாக்கி போட்டி, எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், கடந்த ஒரு வாரமாக நடந்தது.
போட்டியில், சென்னை, கடலுார், மதுரை, சேலம், சிவகங்கை, திருச்சி, திருப்பூர் மற்றும் திருவள்ளூர் என, எட்டு அணிகள் பங்கேற்றன.
அணிகள் 'ஏ' மற்றும் 'பி' என, இருபிரிவாக பிரித்து, 'லீக்' முறையில் மோதி அரையிறுதிக்கு தகுதி பெற்றள்ளன.
அதன்படி, முதல் அரையிறுதியில், சென்னை அணி, 8 - 0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில், சேலம் அணி, 4 - 1 என்ற கணக்கில் சிவகங்கையை தோற்கடித்து வெற்றி பெற்றது.
நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், சென்னை மற்றும் சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி துவங்கி முதலாவது நிமிடத்திலேயே, சேலம் வீராங்கனை தீபா முதல் கோல் அடித்து ஆட்டத்தை துவங்கினார்.
அதன்பின், சென்னை அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்தடுத்த நிமிடங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை கோல்களாக மாற்றியது.
முடிவில், 6 - 1 என்ற கோல் கணக்கில், சென்னை அணி வெற்றி பெற்றது. அணியின் வீராங்கனை சுபலட்சுமி, நந்தினி, அக்ஷதா, பிரிசியா மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.
வெற்றி பெற்ற சென்னை அணிக்கு, கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.