கே.சி.ஜி., வர்கீஸ் கூடைப்பந்து ஹிந்துஸ்தான் பல்கலை 'சாம்பியன்'

சென்னை,
ஹிந்துஸ்தான் பல்கலையின் நிறுவனர் கே.சி.ஜி., வர்கீஸ் நினைவு கோப்பைக்கான, 34வது சீசன் பல்கலை கூடைப்பந்து போட்டி, படூரில் உள்ள பல்கலையில் நடந்தது.
பல்கலைக்கு இடையிலான போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 18 பல்கலை அணிகள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் ஹிந்துஸ்தான் பல்கலை முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டாவது இடத்தை ஜேப்பியார் பல்கலையும், மூன்றாவது இடத்தை கர்நாடகாவின் பி.இ.எஸ்., பல்கலையும், நான்காவது இடத்தை புதுச்சேரி பல்கலையும் வென்றன.
பெண்களுக்கான பிரிவில், வேல்ஸ் பல்கலை முதலிடத்தையும், சென்னை பல்கலை இரண்டாமிடத்தையும், ஹிந்துஸ்தான் பல்கலை மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
இரு பிரிவிலும் முதல் இடங்களை பிடித்த அணிகளுக்கு, 30,000 ரூபாயும், 2வது, 3வது மற்றும் 4வது இடங்களை வென்ற அணிகளுக்கு முறையே, 20,000, 15,000 மற்றும் 10,000 ரூபாய் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.