கேரளாவில் காங்கிரசார் ஒற்றுமை: சொல்கிறார் ராகுல்

4

புதுடில்லி: '' சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


கேரள சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யான சசி தரூர் அம்மாநில ஆளுங்கட்சியை பாராட்டி பேசி அக்கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். இதனை அவர்கள் சமாளிப்பதற்குள், டிரம்ப்பை சந்தித்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டிய சசி தரூரால் கேரள காங்கிரசார் செய்வதறியாது திகைத்தனர்.


இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் உத்திகள், வேட்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என ராகுல் அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தனர்.


இந்நிலையில், 'பேஸ்புக்' பக்கத்தில் ராகுல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

Advertisement