நகராட்சியில் 2023ல் நடந்த முறைகேட்டால் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் துப்புரவு பணியாளர்


நகராட்சியில் 2023ல் நடந்த முறைகேட்டால் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் துப்புரவு பணியாளர்


புன்செய்புளியம்பட்டி,:புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். துப்புரவு பணிகளில், 74 பேர் ஈடுபடுகின்றனர். இவர்களில், 47 பேர், ஒப்பந்த அடிப்படையிலும், 27 பேர் நிரந்தரமாகவும் நகராட்சியாலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் மற்றும் நகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு, கையுறை, ஹெல்மெட், கால் பூட்ஸ், முக கவசம் உட்பட ஆறு விதமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஊழியர்களுக்கு சரிவர வழங்குவதில்லை. இதனால் வீடுகள் தோறும் குப்பையை வாங்கும் போதும், தெருக்களில் குப்பையை அகற்றும் போதும், சாக்கடை துார் வாரும்போதும் கைகளிலேயே குப்பையை அகற்றுகின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: நகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்
களுக்கு கையுறை வழங்குகிறோம். ஆனால், அவர்கள் அணிவதில்லை. ஏற்கனவே குப்பை அள்ளுவதற்காக வாங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சேதமடைந்து விட்டன. கடந்த, 2023ல் துப்புரவு பணிகளுக்கு கொசு மருந்து உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதனால், 2023 முதல் துப்புரவு பணிகளுக்கு என நகராட்சியில் எந்த பொருட்களும் வாங்கப்படுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் அதில் பிரச்னை உள்ளதாக கூறுகின்றனர். கையுறை, கோட், ஷூ, என எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இருப்பில் இல்லை. புதிய பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கித் தர கமிஷனர்
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement