தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை

14


சென்னை: “தி.மு.க., கூட்டணி, யாரும் இடித்து, தகர்த்தெறிய முடியாத இரும்புக் கோட்டைகளால் ஆன கூட்டணி,” என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அவரது பேட்டி: 'தமிழக காவல் துறை முறையாக செயல்படவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார். காவல் துறையை கட்டுப்படுத்துவது குறித்து, அவர் பேசி நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


பா.ம.க.,வை அவரது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ராமதாசும், அன்புமணியும், மேடையில் சண்டை போட்டுக்கொள்ளும் சூழல் உள்ளது. அவர் எங்கே தமிழகத்தை கட்டுப்படுத்த போகிறார்?

இன்னும் எட்டு மாதங்களில், கூட்டணியிலிருந்து தி.மு.க., தனிமைப்படுத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அது, அவரின் நப்பாசை. இந்த கூட்டணி ஏதோ அரசியல் லாபத்திற்காக ஏற்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை சார்ந்த கூட்டணி. இதை யாரும் இடித்து தகர்த்து எறிய முடியாத இரும்புக் கோட்டைகளால் ஆன கூட்டணி.



யாரெல்லாம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனரோ, அவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கிற, கர்நாடக 'டூப் போலீஸ்' தான் அண்ணாமலை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement