குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!

8


ஊத்துக்குளி: ஊத்துக்குளி டவுனில் அ.தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என கட்சியினர் அறிவித்துள்ளனர். கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக இந்த நூதன டெக்னிக்கை கட்சியினர் கையில் எடுத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.,வினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று தேனி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்றார்.



அந்த வகையில், வரும் மார்ச் 5ம் தேதி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுனில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டத்தை நடத்த அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு உரை ஆற்ற உள்ளனர்.


இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அ.தி.மு.க., உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். குலுக்கல் முறையில் 3 நபர்களுக்கு தங்க நாணயமும், 300 நபர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, குக்கர், கிரைண்டர், பீரோ, பேன், சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும் என்று நோட்டீஸ் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே திருப்பூர் பகுதியில் நடந்த ஒரு அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சேர் இலவசமாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் தாங்கள் அமர்ந்திருக்கும் சேரை தாங்களே வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம் என்று அறிவித்து நூதனமாக கூட்டத்துக்கு ஆள் சேர்த்திருந்தனர்.


இப்போதும் அதே வழியை பின்பற்றி ஆள் சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு உள்ளனர். அ.தி.மு.க.,வினரின் இந்த நூதன டெக்னிக், இணையத்தில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement