ஏரி நீர் உறிஞ்சுவதை தடுக்க வலியுறுத்தல்




பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடி ஊராட்சி, வாணியம்பாடியில், 25 ஏக்கரில் ஏரி உள்ளது. அது பனமரத்துப்பட்டி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரி வழியே காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. அதன் ஏர் வால்வு வழியே வெளியேறும் நீர், ஏரியில் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து வாணியம்பாடி ஏரி பாசன விவசாயிகள் கூறியதாவது: ஏரி நிலத்தடி நீர் மூலம், 200 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். ஏரியில் தண்ணீர் தேங்கினால் சுற்றியுள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயர்ந்து, ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவர். ஆனால் ஏரியில் தேங்கும் காவிரி நீரை, ஒருவர், டீசல் இன்ஜின் வைத்து உறிஞ்சி எடுக்கிறார். அனுமதியின்றி சாலையை தோண்டி குழாய் பதித்து தண்ணீர் எடுத்துச்சென்று விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார். இதனால் அவர் மட்டும் பயனடைவதோடு, ஏரி நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கிறது. ஏரியில் இருந்து காவிரி நீர் எடுப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'டீசல் இன்ஜின் வைத்து எடுப்பது குறித்து விசாரிக்க, மண்டல துணை பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ.,வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement