விலங்குகள் தண்ணீர் தேவைக்கு தடுப்பணைகளை துார்வார கோரிக்கை
விலங்குகள் தண்ணீர் தேவைக்கு தடுப்பணைகளை துார்வார கோரிக்கை
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து, தண்ணீர், உணவு தேடி விலங்குகள் வெளியேறும் நிலையில், விலங்குகள் மனித மோதலை தடுக்க, வனப்பகுதியிலுள்ள தடுப்பணைகளை துார்வார, வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், 16,600 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இம்மாவட்ட வனப்பகுதி, கர்நாடகா, தமிழகம் ஆகிய, 2 மாநில எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இதில், காவிரி, சனத்குமார், வாணியாறு, தென்பெண்ணை ஆறு ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, கடம்பை, கடத்தி, நரி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.
இவற்றின் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளத்தின் போது, தடுப்பணைகளில் மண் மற்றும் கற்கள் நிறைந்து, தண்ணீர் தேங்குவதில்லை. இதனால், தற்போது தொடங்கியுள்ள கோடை காலத்தில், பெரும்பாலான தடுப்பணைகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், விலங்குகள் நீரை தேடி ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது.
இதை தடுக்க, வனப்பகுதியிலுள்ள தடுப்பணைகளை துார்வாரி, நீர்தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் மற்றும் மனித மோதலை தடுக்க, விலங்குகளுக்கான நீர் ஆதாரங்களை, அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படுத்த, வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.