3ம் மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது ஏன்: கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி

17


சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, தி.மு.க.,எம்.பி கனிமொழி சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தாவது:
பா.ஜ., எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும் டாக்டர் பர்கலா பிரபாகர் அதை The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் அம்பலப்படுத்தினார். கல்விக் கொள்கைகளின் உண்மையான தாக்கம் குறித்து எங்கள் சொந்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம்.



உங்கள் 2025ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை கூட, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் மூலம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக தமிழகத்தை பாராட்டியது.
நீங்கள் தமிழகத்தின் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். பிறகு உங்கள் அரசாங்கம் சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியில் தமிழகத்திற்கு சரியாகக் கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை ஏன் நிறுத்தி வைத்துள்ளது?


நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், எங்களுக்குப் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக இந்த நிதியை விடுவிக்க உங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள். நீங்கள் உண்மையிலேயே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்பது பற்றிய தரவை எங்களுக்குத் தர முடியுமா? தமிழகத்தில் உள்ள பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழகம் ஒருபோதும் பா.ஜ., வின் தவறான தகவல், நிதி நெருக்கடி மற்றும் ஹிந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை பதிலடி



இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: தரவு பாராட்டுக் குரியதாக இருந்தால், அதை முரசொலியில் முதல் பக்கத்தில் வெளியிடுவீர்கள். ஆனால் மத்திய அரசு வெளியிடும் தரவுகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்தால் அதனை ஒரு சார்புடையது என்கிறீர்கள். கல்வியின் தரத்தைப் புரிந்து கொள்ள அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தினாலும், தி.மு.க.,வின் போலி முகம் வெளிப்படும்.



இன்று தமிழகத்தில் கல்வித் தரம் மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம். உங்கள் சகோதரனும், மருமகனும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்கள். நீங்களாவது பதிலளிப்பீர்களா? தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement