தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறவில்லை; இ.பி.எஸ்.

11

சென்னை; தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க., கூறவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., விளக்கம் அளித்துள்ளார்.


@1brதமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஆளும் தி.மு.க., -அ.தி.மு.க., என அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அரசியல் களத்தில் தி.மு.க., கூட்டணியை விட எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி அமைய போகிறது என்பது பற்றிய கேள்விகளும் ஹேஷ்யங்களும் அதிகம் எழுந்து வருகின்றன.


இப்படிப்பட்ட சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இ.பி.எஸ். நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு இ.பி.எஸ்., அளித்த பதிலின் விவரம் வருமாறு;


கேள்வி; தே.மு.தி.க.,வுக்கு கடந்த கூட்டணியின் போது ராஜ்ய சபா சீட் தருவதாக உறுதியானதாக...


(இ.பி.எஸ். இடைமறிக்கிறார்) பதில்: அதெல்லாம் உரிய நேரத்தில்... அதாவது இந்த கூட்டணி, கீட்டணி அதெல்லாம் விட்ருங்க. நீங்க தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம். புரியுதா?


(இடைமறித்த நிருபர் ராஜ்ய சபா சீட் தருவாங்கன்னு என்று பேசுகிறார். அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே இ.பி.எஸ்., மீண்டும் குறுக்கிட்டு பதிலை தொடர்கிறார்.)


இ.பி.எஸ்; யார் சொன்னாங்க?(தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் விஷயம்)நாங்க சொன்னோமா? சொல்லுங்க பாக்கலாம். நாங்க ஏதாவது சொன்னோமா? யார் யாரோ சொன்னதை வச்சு எங்கிட்ட கேட்காதீங்க சார். நாங்க ஏதாவது வெளிப்படுத்தினோமா? தேர்தல் அறிக்கை வந்ததுல்ல... நாடாளுமன்ற தேர்தல் வந்ததுல்ல, அதில் என்ன வெளியிட்டோம். படிச்சு பாருங்க, அப்படித்தான் நடந்துக்குவோம்.


இவ்வாறு இ.பி.எஸ்., பதிலளித்தார்.


தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய வேண்டுமானால் 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.


இந்த கணக்கீடுகளை ஒப்பீட்டளவில் கணக்கிட்டால் தற்போது 134 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள தி.மு.க.,வுக்கு 4 இடங்கள் கிடைக்கும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 2 இடங்கள் பெற வாய்ப்புள்ளது.


ஒருவரை எம்.பி.,யாக தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., வசம் உள்ளனர். இரண்டாவதாக இன்னொருவரை தேர்வு செய்ய வேண்டுமெனில், ஓ.பி.எஸ்., அல்லது பா.ம.க., அல்லது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதில் யார் யாரிடம் அ.தி.மு.க., ஆதரவு கோரும் என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

Advertisement