நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரிகை நிருபர்கள் எனக் கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பத்திரிகை நிருபர்கள் என்றுக் கூறி, நிதி நிறுவனத்தில் அதிகப்படியான வட்டி வாங்குவதாக புகார் வந்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க மறுத்த ஜஸ்டின் ராஜை அச்சுறுத்தி சட்டை பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பி சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரத்தை சேர்ந்த ஆன்றனி (51), கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுனில் (33), கருவாவிலை பகுதியை சேர்ந்த லால் (36), ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜா (37),
கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் கோபி (52), திருவட்டார் பகுதியை சேர்ந்த பெல்வின் ஜோஸ் (41), கீழபெருவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) மற்றும் சின்ன முட்டம் பகுதியை சேர்ந்த சகாய போஸ்கோ (58) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
