இதோ... நாங்க ரெடி! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.

10

சென்னை: நாளை (மார்ச் 5) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க. கலந்து கொள்கிறது.



லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது தமிழகத்தில் தற்போது உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பது தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.


மறுசீரமைப்பின் போது ஏற்கனவே இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.


சென்னையில் நாளை (மார்ச் 5) இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 அரசியல் கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


இந் நிலையில், இந்த கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க., பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. த.வெ.க., சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியாக பரிணமளித்து ஓராண்டு கடந்துள்ள சூழலில் அக்கட்சி பங்கேற்கும் முதல் அரசியல் நடவடிக்கை மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதால் ரசிகர்கள் மற்றும் த.வெ.க., தொண்டர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


த.வெ.க., தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன விதமான கருத்துகள், ஆலோசனைகள் முன் வைக்கப்பட உள்ளன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, அ.ம.மு.க., சார்பில் மாஜி அமைச்சர் செந்தமிழன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

Advertisement