14.8 கிலோ தங்கம் கடத்தல்: கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!

பெங்களூரு : துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில், கன்னட நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா ராவ் , துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) அதிகாரிகள், கன்னட நடிகை ரன்யா ராவை கைது செய்தனர்.
அவரிடம் 14.8 கிலோ தங்கம் இருந்தது. அதை அவர் முன்கூட்டியே தெரிவிக்கவும் இல்லை. சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், 'பதாகி' மற்றும் 'வாகா' போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை கடந்த 15 நாட்களுக்குள் நான்கு முறை துபாய்க்கு பயணம் செய்துள்ள நிலையில் டி.ஆர்.ஐ., அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தார். பெரும்பாலான தங்கத்தை கண்ணுக்குத் தெரியாமல் அணிந்திருந்ததாகவும், அதே நேரத்தில் தனது ஆடைகளுக்குள் தங்கக் கட்டிகளையும் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் நடிகை ரான்யா ராவ் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார்.
டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்த நடிகை ரான்யா ராவ், நாகவாராவில் உள்ள டி.ஆர்.ஐ., அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தங்கம் தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நடிகை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்வார்கள். அதுமட்டுமின்றி, அதிக அளவு தங்கம் இருந்ததால் நடிகைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.