தென்பெண்ணையில் நுரை; தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு

சென்னை ; தென்பெண்ணையாற்றில் நச்சு நுரையுடன் தண்ணீர் வெளியேறியது குறித்து, தமிழக, கர்நாடகா அரசுகளின் தலைமை செயலர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2024 டிசம்பரில், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஓசூர் அருகே தென் பெண்ணையாற்றில் நச்சு நுரையுடன் பொங்கியது.

கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டதால் தான், நச்சு நுரை ஏற்பட்டதாக, அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக, டிசம்பர் 5ல் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, இவ்வழக்கை சென்னையில் உள்ள தென்மண்டல அமர்வுக்கு மாற்றியது.

அதன்படி, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

கெலவரப்பள்ளி அணையில் இருந்து விடப்பட்ட தண்ணீர், ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றில் ரசாயன நச்சு நுரையுடன் வெளியாகி, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தமிழக, கர்நாடக மாநிலங்கள் தொடர்புடைய பிரச்னை.

எனவே, இதுகுறித்து தமிழக, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் விரிவான ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக, கர்நாடக தலைமை செயலர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement