ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு

9


வாஷிங்டன்: 'ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும்' என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


அமெரிக்க பார்லிமென்டில், எதிர்க்கட்சி அமளிக்கிடையே, கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவின் பொற்காலம் துவங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக உழைத்து வருகிறோம்.


அமெரிக்காவின் உத்வேகம், பெருமை, நம்பிக்கை மற்றும் உற்சாகம் திரும்பி உள்ளது. ஜனவரி 20ம் தேதி பதவியேற்றதிலிருந்து வெறும் ஆறு வாரங்களுக்குள் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு உள்ளேன். 400 நிர்வாக நடவடிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன்.

சாதித்து விட்டோம்




அமெரிக்கா திரும்பி வந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் மற்றவர்கள் செய்ததை விட 43 நாட்களில் நாம் அதிகமாக சாதித்துள்ளோம். ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும்.


அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதிக்கும் எந்தவொரு வரிகளுக்கும் அமெரிக்கா சமமான நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுக்கும். வரிகள் அமெரிக்காவை மீண்டும் மீண்டும் பணக்காரர்களாகவும், சிறந்தவர்களாகவும் மாற்றுவதாகும்.


ஐரோப்பிய நாடுகள், சீனா, பிரேசில், இந்தியா மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட கணிசமாக அதிக வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், நாம் அவற்றுக்கு வரி விதிப்போம்.

பாராட்டு




ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பதை அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாற்றும் உத்தரவில் நான் கையெழுத்திட்டேன். 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணவீக்கத்தை நாங்கள் சந்தித்தோம். எலான் மஸ்க் கடினமாக உழைத்து வருகிறார். இவ்வாறு டிரம்ப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்ப் ஆற்றிய முதல் உரையாகும்.

Advertisement