அனைத்து கட்சி கூட்டம்: த.வெ.க., முடிவில் திடீர் மாற்றம்

1

சென்னை : தலைமைச் செயலகத்தில் இன்று நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும், லோக்சபா தொகுதிகள், அடுத்த ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் இப்பணிகள் நடந்தால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், எட்டு தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது என, முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஆலோசனை



தொகுதி மறுவரையறையின்போது, தமிழகத்தில் உள்ள தொகுதிகள் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடக்க உள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து அறிவிப்பு வந்த நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

'தமிழகத்தின் பிரதான கட்சிகள் சில, கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழகத்துக்கு தற்போது இருக்கும் எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது.

எந்த மாநிலத்துக்கும் அதனால் பாதிப்பு ஏற்படாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அவருடைய விளக்கம் ஏற்கக் கூடியதாகத்தான் உள்ளது.

அதோடு, தொகுதி மறுவரையறை குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு இதுவரை வெளியிடாத நிலையில், தி.மு.க., தன்னுடைய அரசியல் லாபத்துக்காக இவ்விஷயத்தை கையில் எடுத்து, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுகிறது. தி.மு.க., அரசியல் லாபத்துக்கு, நாம் ஏன் துணை போக வேண்டும்? என சிலர் விஜயிடம் கேட்டுள்ளனர்.

பாதிப்பு வரும்



இதையடுத்து, 'அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கலாம்' என, கட்சி தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத சூழலில், தொகுதி மறுவரையறை குறித்து, கட்சியின் வியூக வகுப்பாளர்களிடம் முழு விபரம் கேட்டுள்ளார் நடிகர் விஜய்.

அவர்கள், 'பார்லிமென்ட் தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டால், தமிழகத்துக்கு அதனால் பாதிப்பு வரும்' என எடுத்துக் கூறியுள்ளனர். இதன் பின்பே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.வெ.க., கலந்து கொள்ளும் முடிவுக்கு வந்து, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.வெ.க., சார்பில் அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று, தங்கள் கருத்துகளை எடுத்து வைக்க உள்ளனர்.

Advertisement