ராஜ்யசபா 'சீட்' மறுப்பு: பிரேமலதா அதிர்ச்சி

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. அக்கட்சிக்கு மூன்று தொகுதிகளுடன், ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டு இருப்பதாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறி வந்தார். இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், சமீபத்தில் பிரேமலதா பேட்டி அளித்தார்.

அதேநேரத்தில், நெருக்கடியான சூழலில் உள்ள அ.தி.மு.க., தலைமைக்கு, டில்லியில் அரசியல் பணிகளை மேற்கொள்ள ராஜ்யசபா எம்.பி., தேவை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால், தன் தீவிர விசுவாசிக்கு இப்பதவியை வழங்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுத்துள்ளார். எனவே, தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்' கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் பரவி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா சீட் வழங்கும் வகையில், எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என, பழனிசாமி நேற்று உறுதியாக கூறியுள்ளார்.

இது, தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்த பிரேமலதாவிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பதில் எதுவும் கூறாமல், அவர் சென்று விட்டார்.

இதுதொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில், ஒரு கருத்தை பதிவு செய்து, அதை அவசர அவசரமாக அவரே நீக்கி விட்டார். இப்பிரச்னை தொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் தடை போட்டுள்ளார்.

Advertisement