மழை பெய்தால் சகதிகாடாக மாறும் ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம் மணிநகர் குடியிருப்போர் அடிப்படை வசதி இன்றி தவிப்பு

தேனி: தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மணிநகரில் ரோடு வசதி இல்லாததால் லேசான மழை பெய்தாலே சகதிகாடாக மாறும் ரோட்டில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாகவும், அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சி 10வது வார்டில் தேனி பெரியகுளம் ரோட்டில் மணிநகர் அமைந்தள்ளது. தேனி நகர் பகுதிக்கு அருகே மணிநகர் உள்ளதால் விரிவாக்க பகுதியாகவும் உள்ளதால் அதிக அளவிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் 5 குறுக்குத்தெருக்கள், மகாத்மாதெரு உள்ளிட்ட 6 தெருக்கள் உள்ளன. இதில் 50 வீடுகளில் 200க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததால் தினமும் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக இப்பகுதி குடியிருப்போர் புலம்புகின்றனர். ஊராட்சி நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைகாலங்களில் சகதி காடாகும் ரோடு
சுரேஷ், 3வது குறுக்குத்தெரு,மணிநகர், ஊஞ்சாம்பட்டி : மெயின் ரோட்டில் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன் ரோடு அமைத்தனர். தற்போது அந்த ரோடுகளும் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. குறுக்குத்தெருக்களில் ரோடு வசதியே இல்லை. இதனால் மழைகாலங்களில் ரோடுகளில் தண்ணீர் தேங்குகிறது. லேசான மழை பெய்தாலும் ரோடு முழுவதும் சகதி காடாக மாறுகிறது. இதில் டூவீலரிலும், நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைக்கவில்லை.
இதனால் பல இடங்களில் கழிவு நீரை ரோட்டில் விடும் நிலை உள்ளது. மழைகாலத்தில் கழிவுநீருடன், மழைநீரும் குளம்போல் தேங்குகிறது. இதில் உருவாகும் கொசுக்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். கழிவு நீர் செல்ல சாக்கடை வசதி, குறுக்குத்தெருக்களில் ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
தொடர் திருட்டுகளால் அதிர்ச்சி
ராஜசபரி, மகாத்மாதெரு, மணிநகர், ஊஞ்சாம்பட்டி : மணிநகரில் 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. அதில் அதிகபட்சம் 10 தெருவிளக்குகள் கூட இல்லை. இதனால் மணிநகர் இருள்சூழ்ந்த நகராக உள்ளது.
பணி முடித்து வீடு திரும்புபவர்கள் அச்சத்துடன் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. இந்த இருளை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக இரவில் வீடுகளில் திருட்டு சம்பவம், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.
ஊராட்சி சார்பில் துாய்மைப்பணியாளர்கள் வராததால் பல இடங்களில் குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. தெருநாய்கள் தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்களுடன் வசிப்பவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை.
ஊராட்சி நிர்வாகம், கலெக்டர் அலுவலகத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் முறையிட்டுள்ளோம். அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு
-
சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது
-
ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்
-
ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!
-
ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு விசாரணை அறிக்கை வழங்க இயலாது; ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
-
அய்யா வைகுண்டர் சுவாமி 193வது அவதார தின விழா