கிராம கணக்கு அதிகாரிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் லேப்டாப்

பெங்களூரு:“கிராம கணக்காளர்கள், சிறப்பாக பணியாற்ற வசதியாக, அவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். முதற்கட்டமாக 4,000 லேப்டாப் வழங்கப்படும்,” என, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:

அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா: கிராம கணக்கு அதிகாரிகளுக்கு லேப்டாப் அளிக்க வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கை. எனவே அவர்கள் சிறப்பாக பணியாற்ற உதவியாக, லேப்டாப் வழங்கப்படும். முதற்கட்டமாக 4,000 லேப்டாப், அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் 2,000 முதல் 3,000 லேப்டாப்கள் வழங்கப்படும்.

பா.ஜ., - கேசவ் பிரசாத்: கணக்கு அதிகாரிகளுக்கு, அலுவலகம் இல்லை. ஆனால் உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை எங்கு வைத்து கொள்வது என, அரசு கூற வேண்டும்.

அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா: கால காலத்துக்கு சரியான வசதி செய்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. தற்போது கிராம பஞ்சாத்திலேயே அலுவலக வசதி செய்யப்படுகிறது.

கேசவ் பிரசாத்: கிராம கணக்கு அதிகாரிகள், ஒவ்வொரு முறையும் வீதிக்கு வந்து, போராட்டம் நடத்தி அடிப்படை வசதிகள் கேட்கின்றனர்.

அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா: அலுவலகம் இல்லை என, கிராம கணக்கு அதிகாரிகள் போராட்டம் நடத்தவில்லை. ஆயிரக்கணக்கான நில பட்டாக்கள், இறந்தவர்களின் பெயரில் உள்ளன.

எனவே பட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கிராம கணக்கு அதிகாரிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

அவர்களுக்கு புரிய வைப்போம். அவர்கள் மீது 'எஸ்மா' சட்டத்தை பிரயோகிக்கும்படி, ஆலோசனை வந்தது. ஆனால் அது சரியல்ல என, மறுத்தோம். கிராம கணக்கு அதிகாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

Advertisement