தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு; அதில் கைவைப்பது ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

102

சென்னை: 'தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் பகையுணர்ச்சி ஏற்படும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




அவரது கடிதம்: ஹிந்தியும், சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. தமிழகம் தன் உயிரினும் மேலானத் தமிழையும், அதன் பண்பாட்டையும் உயிரைக் கொடுத்து காப்பாற்றியுள்ளது. அடுத்த தலைமுறை தனது தாய்மொழியை இழந்து, ஆதிக்க மொழியே அனைத்தும் என்ற நிலைக்குத் தள்ளப்படும். அதனால் தான் மொழித் திணிப்பை தி.மு.க., தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நாம் தாய்நாட்டை மதிக்கிறோம். தாய்மொழியை உயிரெனக் காக்கின்றோம். உலகத் தாய்மொழி நாள் என்பது பிப்ரவரி 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளுமே நமக்குத் தாய்மொழி நாள்தான்.



ஆதிக்க மொழிகளிடமிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்கு எல்லா நாளிலும் விழிப்புடன் இருப்போம். நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். ஹிந்தித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வட மாநிலத்தவரின் நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே நம் மொழிக் கொள்கை. தமிழகம் முன்னெடுத்த மொழிக்கொள்கை அறிவியல் பூர்வமானதும் ஆக்கப் பூர்வமானது மாகும்.


சமத்துவம் என்பது மொழிகளுக்கிடையிலும் இருக்க வேண்டும். ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? தமிழ் மீது பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.,வினருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் உயர் தனிச்செம்மொழி என்ற தகுதியுடைய எங்கள் தாய்மொழியை ஆட்சி மொழியாக்கிட எது தடுக்கிறது? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement