இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்; தி.மு.க., அரசை கேட்கிறார் ராமதாஸ்

சென்னை: கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 போதாது, டன்னுக்கு குறைந்தது ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கரும்பு அரவைப் பருவம் இப்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. 9.5 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாக சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,151 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விலை தான். இந்த விலை விவசாயிகளுக்கு எந்த வகையிலும் போதாது.

ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,200 வரை செலவாகிறது. அதனுடன் 50% லாபம் மற்றும் போக்குவரத்துச் செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை. ஆனால், உற்பத்தி செலவை விட குறைவாக தொகையை கொள்முதல் விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அறிவிக்கிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்திருந்தது. 2021ம் ஆண்டில் ரூ.4,000 கொள்முதல் விலை வழங்கப்பட்டிருந்தால், இப்போது ரூ.5,000 ஆக உயர்ந்திருக்கும். ஆனால், அதை தி.மு.க., செயல்படுத்தவில்லை. 2016ம் ஆண்டு வரை ஒரு டன் கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2017ம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குவோம் என்று அறிவித்தது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது இப்போது டன்னுக்கு ரூ.1,000 ஆக அதிகரித்திருக்கும். ஆனால், அதையும் செயல்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போல டன்னுக்கு ரூ.215 வீதம் ஊக்கத்தொகை வழங்கி வந்தது. நடப்புப் பருவத்துக்கு அதுவும் வழங்கப்படவில்லை. இதனால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் துயரத்தைப் போக்கும் வகையில் தமிழகத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், ஊக்கத்தொகையை டன்னுக்கு ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement