காமராஜர் பெயரை நீக்கி விட்டு காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா? சீமான் கொந்தளிப்பு

சென்னை: 'திருத்தணி நகரில் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது' என்று நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கப்படும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த அடையாளங்கள் போதாதென்று, தமிழ்ப்பெருந்தலைவர்களுக்குத் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளச் சின்னங்களையும் அழித்தொழிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த தலைவர்களின் பெயரை மாற்றி, பராமரிப்பு என்ற பெயரில் கருணாநிதி பெயரில் திறப்பது எவ்வகையில் நியாயமாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
தமிழத்தில் 9 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகள் செய்து, பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் காமராஜருக்கு இணையான இன்னொரு முதல்வர் இன்று வரை யாரும் வரவில்லையென்று மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அந்த அளவிற்கு மிகச்சிறப்பான ஆட்சியைத் தந்த கர்மவீரர் காமராசரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஏதும் இதுவரை நிறுவப்படவில்லை என்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் பெருந்தலைவரின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும்.
இந்த நிலையில், பெருந்தலைவரின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க முயல்வது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ முயன்ற செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகு, பின் வாங்கிய தி.மு.க., அரசு, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று பூசி மொழுகியது.
அறம் சார்ந்த நல்லாட்சியின் மாட்சிமையால் மக்கள் மனதில் நீங்காது நிலைபெற வேண்டுமே தவிர, மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், மற்றவர்களின் அடையாளத்தை அழித்து, வலிந்து திணிக்கப்படும், இதுபோன்ற விளம்பர அடையாளங்கள் மண்ணிலும் நிலைக்காது! மக்கள் மனதிலும் நிலைக்காது. ஆகவே, திருத்தணி நகரில், பெருந்தமிழர் ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவைக் கைவிட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும்
-
நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து
-
ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி
-
ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்
-
பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!
-
மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி: வாசன் எதிர்ப்பு