இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!

2


வாஷிங்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தஹாவூர் ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளான்.


மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது. அவனை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் அனுமதி அளித்தன. அதிபர் டிரம்பும் ஒப்புதல் அளித்து விட்டார்.


இந்த நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தஹவூர் ராணா அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளான். அந்த மனுவில், தான் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் என்பதால், இந்தியாவில் சித்ரவதைக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளான்.


உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், இந்த விசாரணை காலம் முடியும் வரை ராணா உயிருடன் இருப்பதே சந்தேகம் தான் என்றும் அவனது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Advertisement