தொழில் உரிமம் புதுப்பிக்க மும்மடங்கு கமிஷன் கேட்டு மிரட்டல்; மாநகராட்சி அதிகாரிகள் மீது வணிகர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தொழில் உரிமம் புதுப்பிக்கும் அவகாசத்தை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், வணிகர்களிடம், மூன்று மடங்கு கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், சிறு, குறு முதல் பெரிய வியாபார கடைகள் வரை இயங்கி வருகின்றன. இதில், 67,000 கடைகள் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதற்குமுன், தொழில் உரிமம் பெற குறைந்தபட்சமாக, 500 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அதன்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும், சிறிய கடைகள், உணவகங்கள், துணி கடைகள் உள்ளிட்டவை, தங்கள் கடைகளின் தன்மைக்கு ஏற்ப, உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பதற்கு பதிலாக, குறைந்தபட்ச கால இடைவெளி வழங்க வேண்டும் என, வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
கட்டணம் நிர்ணயம்
அதன் அடிப்படையிலும், தொழில் உரிமத்திற்கான அவகாசம், ஓராண்டில் இருந்து, மூன்றாண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. மேலும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சில தொழில்களுக்கு, 50 முதல் 100 சதவீதம் வரை தொழில் உரிம கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, வளர்ப்பு பிராணிகள், பறவைகள் கடைகளுக்கு, 20 ரூபாய் இருந்த தொழில் உரிம கட்டணம், 1,500 முதல், 10,000 ரூபாய் வரை என, பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.மேலும், சிறு, குறு கடைகளுக்கு, 3,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய்; சிறிய கடைகளுக்கு, 7,000 முதல் 10,000 ரூபாய்; நடுத்தர கடைகளுக்கு, 10,000 முதல் 20,000 ரூபாய்; பெரிய கடைகளுக்கு, 15,000 முதல் 50,000 ரூபாய் என, 500க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் பட்டியலிடப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மூன்றாண்டு கால தொழில் உரிமம் வழங்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.மேலும், அமர்ந்து சாப்பிடக்கூடிய டீ கடை முதல் ஹோட்டல் வரை, சதுர அடி பரப்பளவு அடிப்படையில், 5,000 முதல் 15,000 ரூபாய் வரை; கேன்டீன், பாஸ்புட், ரெஸ்டாரன்ட் ஆகியவற்றும் சதுர அடி பரப்பளவில், 5,000 முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பா போன்றவற்றிற்கு, 25,000 ரூபாய் வரை தொழில் உரிமம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், இந்தாண்டுக்கான மூன்றாண்டு கால புதுப்பித்தல் மார்ச் 31ல் முடிகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க, வியாபாரிகளை, மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இழுத்தடிப்பு
ஏற்கனவே, மூன்றாண்டு கால கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், சிறு வியாபாரிகள் இருக்கும் நிலையில், கமிஷன் தொகையையும், மூன்று மடங்கு வழங்க வேண்டும் என, அதிகாரிகள் மிரட்டுவதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: ஓராண்டு புதுப்பித்தலின்போது, புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை, கமிஷனாக அதிகாரிகள் கேட்டு பெறுவர். தற்போது மூன்றாண்டு என மாற்றப்பட்டு உள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகள் வர மாட்டீர்கள். எனவே, மூன்றாண்டுக்கான கமிஷன் தொகையும் தாருங்கள் என்கின்றனர்.
உதாரணமாக ஓராண்டுக்கு, 5,000 ரூபாய் என, மூன்றாண்டுக்கு, 15,000 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர்.
அவ்வாறு கமிஷன் தரவில்லை என்றால், புதுப்பித்தலின்போது, சில ஆவணங்கள் இல்லை என, இழுத்தடிப்பது தொடர்கிறது. இதனால், கடன் வாங்கியாவது சிறு வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீண்ட காலமாக, நிரந்தர தொழில் செய்யும் பெரும் வணிகர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கலாம். இது, அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
அதேநேரம், சிறு, குறு வியாபாரிகள், சூழலுக்கு ஏற்ப தொழில் செய்பவர்கள், சரியான வருவாய் கிடைக்காவிட்டால், அந்த தொழிலை நிறுத்திவிட்டு, வேறு பிழைப்பு, வேறு தொழிலுக்கு மாறுவர். அப்போது, புதிதாக தொழில் உரிமம் பெற வேண்டும்.
இதுபோன்றோர், மூன்றாண்டுக்கு தொழில் உரிமம் பெறுவது என்பது சிரமமான காரியம். இத்தகையோர் விருப்பத்தின் பேரில், மூன்றாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை தொழில் உரிமம் புதுப்பிக்கும் வாய்ப்பை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே, வியாபாரிகளின் விருப்பம்.
ஆண்டுதோறும் தொழில் உரிமம் புதுப்பிப்பது கடினமாக உள்ளது; கால இடைவெளியை அதிகரிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்தான், மூன்றாண்டு அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். வியாபாரிகள் விருப்பப்படி, புதுப்பித்தலுக்கான அவகாசத்தை ஓராண்டு முதல் நிர்ணயித்து கொள்வதற்கான பரிந்துரையை, அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
அரசு அனுமதி அளித்தால், விதிகளில் மாற்றம் செய்யப்படும்.தொழில் உரிமம் பெறவோ, புதுப்பிக்கவோ எவ்வித கமிஷனும் அதிகாரிகள் பெறுவதில்லை; அவ்வாறான புகார்களும் வரவில்லை. மாநகராட்சியின் இணையதளத்தில்கூட, உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம். முறைகேடு, கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை.- கே.பி.பானுசந்திரன், வருவாய் அலுவலர்,சென்னை மாநகராட்சி.

மேலும்
-
மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு
-
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!
-
சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு
-
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்; தி.மு.க., அரசை கேட்கிறார் ராமதாஸ்
-
வயசோ ஒன்று கூட ஆகலை... சாதனையோ ஏராளம்
-
ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சரமாரி கத்திக்குத்து; மயிலாடுதுறையில் வாலிபர் வெறிச்செயல்!