பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்

குருகிராம்: பாட்டி வங்கிக் கணக்கில் 80 லட்சம் ரூபாய் இருப்பதாக, பள்ளியில் பெருமை பேசிய ஒன்பதாம் வகுப்பு மாணவியால், மொத்த பணமும் பறிபோனது.
ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின், 75 வயது பாட்டி, தன் நிலத்தை விற்று வங்கிக் கணக்கில் 80 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். அந்த வங்கிக் கணக்கை ஆன்லைனில் கையாளும் வாய்ப்பு இந்த மாணவிக்கும் இருந்தது. எனவே, பள்ளியில், இது பற்றி மற்ற மாணவ - மாணவியரிடம் சுய பெருமை பேசி, தம்பட்டம் அடித்திருக்கிறார்.
சில நாட்களிலேயே, அந்த மாணவியை மர்ம கும்பல் தொடர்பு கொண்டு, அவரது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி, 80 லட்சம் ரூபாயை 'அபேஸ்' செய்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: குருகிராம் 10வது செக்டாரைச் சேர்ந்த அந்த மாணவி, 80 லட்சம் ரூபாய் குறித்து பள்ளியில் பேசியபோது, 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் கேட்டு, தன் அண்ணனிடம் தெரிவித்தான். மாணவனின் அண்ணன், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 80 லட்சம் ரூபாயை பறிக்க திட்டமிட்டுள்ளார். மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவருக்கு அனுப்பி, அந்த படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டினர்.
இதனால், பயந்து நடுங்கிய மாணவி, பாட்டியின் கணக்கில் இருந்து, மர்ம கும்பல் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைனிலேயே பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பினார். 80 லட்சம் ரூபாயையும் சுருட்டிய பிறகும், அந்த கும்பல் விடவில்லை. மாணவி டியூஷன் படிக்கும் இடத்துக்கே நேரில் சென்று மிரட்டி உள்ளனர்.
பாடத்தில் கவனம் செலுத்தாமல், மாணவி சோகமாக இருப்பதை பார்த்த டியூஷன் ஆசிரியை, அது பற்றி விசாரித்த போது தான், 80 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் பறித்த தகவல் தெரிந்தது. அதுவரையிலும், மாணவியின் பாட்டிக்கு கூட தெரியாது.
உடனே, மாணவியின் பாட்டியை அழைத்து, முழு விபரத்தையும் டியூஷன் ஆசிரியை தெரிவித்ததும், அவர் எங்களிடம் புகார் அளித்தார். மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய சுமித் கட்டாரியா, 22, உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமித்திடம் இருந்து 5 லட்சம் ரூபாய், டெபிட் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 36 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும்
-
மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு
-
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!
-
சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு
-
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்; தி.மு.க., அரசை கேட்கிறார் ராமதாஸ்
-
வயசோ ஒன்று கூட ஆகலை... சாதனையோ ஏராளம்
-
ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சரமாரி கத்திக்குத்து; மயிலாடுதுறையில் வாலிபர் வெறிச்செயல்!