2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு

2


திருவனந்தபுரம்: 2026 சட்டசபை தேர்தலில் புதிய முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேரள சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி கூட்டணியினர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.


இந்த சூழலில், தேர்தலுக்கு முன்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கொல்லத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், சட்டசபை தேர்தல் மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது.


இந்த நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் கூறுகையில், "வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் இந்த மே மாதம் வந்தால் 80 வயதை எட்டவுள்ளார். ஆனால், முதல்வர் என்பதால், வயது வரம்பில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது," எனக் கூறினார்.


அதேவேளையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "எதிர்வரும் சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். முதல்வர் வேட்பாளர் மற்றும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை உரிய நேரத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்," என்றார்.


இதனிடையே, 80 வயதான பினராயி விஜயன், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2016ம் ஆண்டு மாநிலத்தின் 12வது முதல்வராக பொறுப்பேற்ற பினராயி விஜயன், தொடர்ச்சியாக அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Advertisement