காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!

22


லண்டன்: லண்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பினார். இதற்கு, 'காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.


லண்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பினார். ‛நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதட்டப்பட வைக்கப்போகிறேன்' என்று தான் தனது கேள்வியை ஆரம்பித்தார் பாகிஸ்தான் பத்திரிகையாளர்.

‛காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி எதிர்த்து நிற்கின்றனர். பிரதமர் மோடி தனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசி காஷ்மீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவாரா?' என்று கேள்வி எழுப்பினார்.



பாகிஸ்தான் பத்திரிகையாளர் இப்படி கேட்டதும், ஜெய்சங்கரோ கொஞ்சம் கூட பதற்றப்படவில்லை. கோபத்தை வெளிப்படுத்தாமல் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சிறந்த நடவடிக்கையின் முதல் படி.


அடுத்ததாக காஷ்மீரின் வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியது, சமூக நீதியை மீட்டெடுத்தது 2வது படி. மிக அதிகபடியான வாக்குப்பதிவுகளுடன் காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது மூன்றாம் படி என்று நினைக்கிறேன்.


இன்னும் ஒரே ஒரு விவகாரம் மட்டும் தான் தீர்க்கப்படவில்லை. அந்த பிரச்னை இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ளது. அதுதான் மொத்த இந்தியாவும் காத்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர்.


அதை மட்டும் மீட்டு கொண்டு வந்து விட்டால் மொத்த காஷ்மீர் பிரச்னையும் தீர்க்கப்பட்டு விடும் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

Advertisement