எப்போது தேறும் தென் ஆப்ரிக்கா * தொடரும் 'நாக் அவுட்' சோகம்

லாகூர்: ஐ.சி.சி., தொடரில் மீண்டும் ஒருமுறை 'நாக் அவுட்' போட்டியில் தோற்ற சோகத்துடன் நாடு திரும்புகிறது தென் ஆப்ரிக்கா.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தது. இதன் 'பி' பிரிவில் இடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணி, வழக்கம் போல லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நியூசிலாந்தை சந்தித்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 362/6 ரன் குவித்தது.
ஒருநாள் அரங்கில் நடந்த 4,854 போட்டிகளில் 362 ரன்னுக்கும் மேலான இலக்கு, இரு முறை தான் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டது. 2006ல் 438/9 (ஆஸி.,), 2016ல் 372/6 (ஆஸி.,) என இரு முறை சாதித்து காட்டியது தென் ஆப்ரிக்கா. இதனால் நியூசிலாந்தை வெல்லும் என நம்பப்பட்டது.
மாறாக, அரையிறுதி என்றவுடன் வழக்கம் போல பதட்டம் தொற்றிக் கொள்ள, மறுபடியும் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா. ஐ.சி.சி., தொடர்களில் பங்கேற்ற 21 'நாக் அவுட்' போட்டியில் 15வது முறையாக (6ல் வெற்றி) தோற்றது.
கடைசியாக பங்கேற்ற 2014 'டி-20' உலக கோப்பை அரையிறுதி (இந்தியா), 2015 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதி (நியூசி.,), 2023 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதி (ஆஸி.,), 2024 'டி-20' உலக கோப்பை பைனல் (இந்தியா), 2025, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி (நியூசி.,) என ஐந்து ஐ.சி.சி., தொடரின் 'நாக் அவுட்' போட்டியிலும் தென் ஆப்ரிக்கா தோற்றது.
அடுத்து 2027ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலக கோப்பை தொடரை ஜிம்பாப்வே, நமீபியாவுடன் இணைந்து நடத்த உள்ளது தென் ஆப்ரிக்கா.
இதுகுறித்து தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியது:
ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக கற்றுக் கொள்ள கிடைத்த வாய்ப்பு தான். இதில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அரையிறுதி, கடினமான பாடத்தை கொடுத்து விட்டது. எங்களால் முடிந்தவரை போராடினோம். துரதிருஷ்டவசமாக தொடரில் இருந்து வெளியேற நேரிட்டது.

இருப்பினும் எங்களது பேட்டர்கள், பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சில பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2027 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டரை ஆண்டு உள்ளன. இதற்கு முன் ஒரு அணியாக இணைந்து, வலிமையான முறையில் மீண்டு வருவோம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement