தவறாக வீசப்பட்ட குண்டு தென் கொரியாவில் 15 பேர் காயம்

சியோல்:தென் கொரியாவில் போர் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானப் படையினர் தவறான இடத்தில் குண்டு வீசியதால் குடியிருப்புகள் சேதமடைந்ததுடன், 15 பேர் காயமடைந்தனர்.
கிழக்காசிய நாடான தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 40 கி.மீ., தொலைவில் போச்சியான் நகர் உள்ளது. இதன் அருகே வடகொரியாவுடனான எல்லை அமைந்துள்ளது.
இதை ராணுவத்தினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இங்கு விமானப்படையின் பயிற்சி மையமும் அமைந்துள்ளது.
இந்நிலையில், தென்கொரியாவில் அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ ஒத்திகை துவங்க உள்ளது.
இதற்காக தென் கொரியா மற்றும் அமெரிக்க விமானப்படையினர் இணைந்து நேற்று கே.எப்., 16 ஜெட் விமானத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது எம்.கே.82 என்ற 225 கிலோ எடையுடைய குண்டை தவறான இலக்கில் ஏவினர். அது குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்ததில் வீடுகள், தேவலாயம் ஆகியவை சேதமடைந்தன.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு துறையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.